பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உன்பால் தோற்று, உன்னால் பெற்ற புறப்புண் நாணி வடக்கிருக்கும் அப் பெருஞ்சேரலாதனே நனி நல்லனாவன்” என் அவனைப் பழித்துள்ளமை உணர்க.

"களியியல் யானைக் கரிகால் வளவ!
சென்றமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே?
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே."

"உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்று அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து" என்ற உயர் நோக்குடையவர் பழந்தமிழ்த் தளபதிகள். முயலை வேட்டையாடுவதும், வேழத்தை வேட்டை ஆடுவதும் வேட்டை யாடுதல் என்ற ஒருமைப்பாட்டில் ஒன் றாகவே மதிக்கப்பெறும் என்றாலும்,முயல் வேட்டம் புரிவோன் செயலினும் யானை வேட்டம் புரிவோன் செயலே நனி பாராட்டற்குரித்தாம்.ஒருவன் முயல் வேட்டை மேற்செல்ல, மற்றொருவன் வேழ வேட்டத் தில் விருப்புடையனாய்ச் செல்ல,முன்னவன் வெற்றி கண்டு வீழ்த்திய முயலோடு வீடுதிரும்ப,பின்னவன் வேழத்தின் மீது வீசிய வேல் குறிபிறழ்ந்து விட்டதாக,வேழம் பிழைத்துப் போய்விட,அவ்வெறும் வேலோடு வீடு திரும்பக் கண்டால்,மக்கள்,முன்ன வனை மதியாது பின்னவனையே பாராட்டுதல் வேண்டும் என விழுமிய வீரத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார் வள்ளுவப் பெருந்தகையார்.

"காளமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது."

போர் என்றதும் பூரிக்கும் தோளினராகவே விளங்கினார்கள் அக்கால வீரர்கள் என்றாலும், அவர்கள் பயன் குறியாது போரிடுவாரல்லர். தான் பிறந்த குடிப்புகழைப் பெருக்குவது, தான் வாழும்