பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வான்மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடையாளர்.
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநார்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது!"

'பொருள் அளித்தோம் நாம். அது பெற்று அவர்கள் தம் உயிர் கொடுத்தார்கள். ஆகவே, அவர் கேடு குறித்துக் கவலை கொள்வது வேண்டுவதின்று என்று எண்ணும் இழி மனம் நம் தமிழ் மன்னர்க்கு என்றும் இருந்ததில்லை. போர் முடிந்து ஓய்ந்ததும் அற்றைநாட் போரில் வெற்றிதர வெஞ்சமர் புரிந்து கீழ்ந்த வீரர் எத்துணையர், விழுப்புண் பெற்று வீழ்ந்து கிடப்பார் எத்துணையர், வீரர்களைப் போலவே போரில் புண்பெற்றுத் துடிக்கும் கரிகள் எத்தனை, பரிகள் எத்தனை என அறிந்து, அத்துணை அழிவிற்கும் காரணமாம் தன்னை நொந்து கொண்டு உறக்கம் ஒழி வதும், அவற்றை நேரில் கண்டு ஆறுதல் மொழி அளித்தும், வேண்டும் வசதி அளித்து வாழ்விக்கவும் வேண்டி, அவ்விரவிலேயே அவையுறையும் பாசறைக் கண் புகுந்து வலம்வந்து தனித்தனியே உலாவி மீள் வதும், பொழுது புலர்ந்த நிலையில் நாளோலக்கப் பேரவையில் அமர்ந்து, படையில் பணி புரிந்தனர். அவர் புரிந்த பணிகளின் தகுதிக்கேற்ப அவர்களை ஒருவர் பின் ஒருவராக அழைத்து ஏற்ற பரிசளித்து அனுப்புவதும் அக்கால அரசர்கள் மேற்கொண்ட அறப்போர் முறைகளாம்.

போர் அழிவு கண்டு கலக்க முற்றமையால் கண் உறங்காவாக, பகைவர் விரைந்து ஏவ வந்து பாய்ந்த வேல் ஏறுண்டு, தாம் விருப்பும் தம் பிடியானை கள் தம்மைக் காணாது நெடிது வருந்தி நிற்க உயிரிறந்து போன களிறுகளை நினைந்தும், பகைவர் படை