பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

யைச் சேர்ந்த யானைகளின் பெரிய கைகள்,மலைப் பாம்புகள் கிடந்து புரள்வனபோல் வெட்டுண்டு வீழ்ந்து துடிக்குமாறு வெஞ்சமர் புரிந்து தம் செஞ்சோற்றுக் கடன் தீர்ந்து இறந்துபோன எண்ணிலா வீரர்களை நினைந்தும், தம் மேனியில் இட்ட மெய்யுறை களையும் ஊடறுத்துக் கொண்டு உடலிற் சென்று பாய்ந்த அம்புகள் ஆக்கிய புண்கள் தருநோயால்,உடல்குன்றி, உணவு உண்ணவும் மறுத்துத் தலை தாழ்த்திக் கிடக்கும் குதிரைகளை நினைந்தும் கவலை மிகுந்து, ஒரு கை பள்ளியை ஊன்றிக் கிடக்க, ஒரு கை முடிகிடக்கும். தலையைத் தாங்கி நிற்கச் செயலற்றுச் சிறிது பொழுது இருந்து, பின்னர் ஏதோ நினைவான்போல், கைவிரல்கள் முடியில் கிடக்கும் மலர்க் கண்ணியை வருட வீற்றிருக்கும் வேந்தன் ஒருவன் பாசறை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது முல்லைப் பாட்டு.

"கண்படை பெறாஅது
எடுத்தெறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம், வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத்
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்திச்
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல்துமிபு
வைந்நுனை பகழி மூழ்கலின் செவிசாய்த்து
உண்ணாது உயங்கும்மா சிந்தித்தும்
ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல்
நகைதாழ் கண்ணி நல்வலம் திருத்தி
அரசு இருந்து பனிக்கும் முரசுமுழங்கு பாசறை."

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டித் தாம் பாடிய நெடுநல் வாடையில் ஆசிரியர் நக்கீரர், பகைவரின் யானைப்