பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

வாழுமளவு அடர்ந்த காடுகள் சூழ்ந்ததும், பலாக் கனிகள் போலும் பழவகைகள் தந்து பயன் அளிப்பதுமான ஒரு மலையை அரசிருக்கையாகக் கொண்டு, ஆட்சி புரிந்திருந்தான். சிறந்த விற்படையும், வேழப் படையும் அவனுக்குச் சிறப்பளித் திருந்தன.

அதியன் ஆட்சி புரிந்துகொண்டிருந்த காலத்தில், பாண்டி நாட்டு ஆட்சி உரிமையை,நனிமிக இளையனாகிய நெடுஞ்செழியன் ஏற்றான்.பசும்பூண் பாண்டியன் எனவும் அழைக்கப்பெறும் அவன், தன் ஆட்சிப் பரப்பையும், அதை ஆளும் பொறுப்பேற்று நிற்கும் தன் இளமையையும், தன்னை அழித்து ஆட்சியைக் கைப்பற்றக் கருதும் பகைவர்களின் பெருமையையும் எண்ணிப் பார்த்து, தன் ஆட்சிக்கு அரண் அளிக்கவல்ல நல்ல படைத்தலைவர் சிலர் வேண்டும் எனத் துணிந்தான். அவ்வாறு எண்ணி,அவனால் தேர்ந்து மேற்கொண்ட படைத்தலைவர்களுள் அதியனும் ஒருவன். பாண்டியர் படையில் பணிபுரிவுதால்,தன் ஆட்சிக்கும் கேடில்லை.ஒரு பெரிய அரசுக்குப் பகைவரால் வர இருக்கும் அழிவைப் போக்கும் பெருமையும் உண்டாகும் என உணர்ந்து, அதியனும், அப்பெரும்பணியை உவந்து ஏற்றுக் கொண்டான்.

பாண்டியர் படைத்தலைவனாய்ப் பணிபுரிந்து கொண்டு இருந்தான் அதியன். அந்நிலையில், நெடுஞ்செழியன் எண்ணியது நடைபெற்றுவிட்டது. நெடுஞ்செழியன் நாடாளத் தகுதியில்லா நனி இளையன் என எண்ணிவிட்ட அறியாமையால், அவன் எண்ணிச் செய்திருக்கும் ஏற்பாடுகளை அறியாமல், அரசர் சிலர் அவன் மீது படை தொடுத்துவிட்டார்கள். யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என் சேரனும், கிள்ளிவளவன் என்ற சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற குறுநில மன்னர்களுமாகிய ஏழரசர்


த-3