பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

யாயினும், பாழுறாது அவன் உடல். அத்துணைத் திண்மை வாய்ந்தது பிட்டன் பருவுடல்.

உரம் மிக்க உடல் வாய்க்கப் பெற்ற பிட்டங் கொற்றன் படைக்கலப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.வாள், வில் வேல் ஆகிய முப்படைப் போரிலும் அவன் முழுப் பயிற்சி பெற்றிருந்தான். அவன் வாள், குறிதவறாது பகைவரை வெட்டி வீழ்த்தும் வில்லை வேண்டுமளவு வளைக்க வல்ல வன்மையுடையது அவன் கை. அவன் எந்தும் வேல் களம் பல கண்டது; கூர்மை வாய்ந்தது; எவ்வளவு பெரிய போரையும் எவ்வளவு கொடிய பகைவரையும் கொன்று வெல்ல வல்லது. பகை பெரிது; அதை அழிப்பது அரிது என் ற நிலை ஏற்படும் காலத்தில் அவன் எடுப்பது வேற்படையே. பிட்டன் கையில் வேல் ஏறினால், பகைவர்க்கு ஆறாத் துயர் உண்டாவது உறுதி. அதனால், பகைவருள் எப்படையாளரையும் எதிர்த்து நிற்க அவன் அஞ்சுவதில்லை.

பிட்டங்கொற்றன் இவ்வளவு பேராற்றல் பெற்றிருந்தும், போர்க்களத்தில், போர்முறைக்கு முரண்பட நடந்து கொள்ளான். பகைவர்களை எவ்வாறேனும் வெற்றி கொள்ள வேண்டும் என் பதற்காகப் பழிமிகு வழிகளில் போரிடத் துணியான். பகைவர் படைக்கலம் இழந்து நிற்கும் நிலை நோக்கி அவர் மீது பாய்வதோ, தோற்றுப் புறங்காட்டி ஓடுவார் மீது படைக்கலம் ஏவுவதோ அவன் செய்யான். அவன் செய்யும் போர் கொடிய விளைவு களைத் தரும் என்பது உண்மை. ஆனால், அவன் மேற் கொள்ளும் போர் முறையில் பிழை இருக்காது. அதை விரும்பாது, ஆண்மை விரும்பும் அவன் உள்ளம்.

சிறந்த போர் வீரனுக்கு இருக்கவேண்டிய உயர்ந்த பண்புகளில் ஒன்றும் குறையாமல் பிட்டங்