பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கொற்றன்பால் அமைந்திருந்தமையால், அவன்,பகையரசன் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் போதோ, பகையரசன் படை, தன் நாட்டின்மீது. பாய்ந்து வரும்போதோ, "நம் படைவீரர் முன்னே சென்று போரிடுக! நாம் பின்னே செல்லலாம்" என்று எண்ணாது, இரு நிலையிலும் அவனே முதற் கண் போர்க்களம் புகுவன். பகைவர் நாடு நோக்கிப் பாய்ந்து செல்லும்போது, தன் படைச் செலவைத் தடுத்து நிறுத்தி அழிக்க அப்பகைவர் வீசும் படைக் கலங்கள் அவ்வளவையும், தன் படை வரிசையின் முன்னே நின்று தனியொருவனாகவே தாங்கி, அழித்துத், தன் படைக்கு அழிவு நேராவண்ணம் காப்பான். பகைவர் படை பெரிய வெள்ளம்போல் பாய்ந்துவரும் காலத்தில்,அப்பகைவர் படையால், தன் படையணி அழிந்து பாழுற்றுப் போகாதிருத்தற் பொருட்டு, பகைவர் படைவரிசையின் முன் சென்று,பாய்ந்து வரும் ஆற்று வெள்ளத்தை, இடைநின்று தடுத்து நிறுத்தும் கல்லணையேபோல்,அவரைத் தடுத்து, அவர் ஆற்றலை அழித்துத் தன் படையினைக் காப்பாற்றுவான்.இவ்வாறு சென்று தாக்கும் போர், நின்று தாங்கும் போர் ஆகிய இருவகைப் போரிலும், இவனே முன் நின்று விடுவதால் இவனை வீட்டில் காண்பது அரிதாம். என்னே அவன் போர் வேட்கை!

"நும்படை செல்லும் காலை அவர்படை
எடுத்து எறிதானை முன்னரை எனாஅ.
அவர்படை வரூஉம் காலை நும்படைக்
கூழை தாங்கிய, அகல்யாற்றுக்
குனறுவிலங்கு சிறையின் நின்றனை எனாஅ
அரிதால் பெரும! நின் செவ்வி!"

பிட்டங்கொற்றன், இவ்வாறு, பேராண்மையும் பெரிய படையும் கொண்டு வாழ்வதைப் பார்த்தான்.