பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உவந்து மேலும் மேலும் வழங்குவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அப்பிட்டன், அவ்வேந்தன் பொருட்டு பெறுதற்கரிய வெற்றிகள் பல பெறுவானாக என வாழ்த்தினார். உடனே போர்க்கொடுமை அவர் கண்ணில் புலப்பட்டது போலும். வெற்றி எளிதில் வாய்க்காதே. புண்பல பெறவேண்டி நேருமே. அப்புண்ணில் ஒன்று பெரிதாகிவிடின், தம் இரவலர் வாழ்விற்கே இறுதி நேர்ந்து விடுமே. வறியோர்க்கு வழங்கும் வள்ளல்கள் வற்றிவிட்ட இவ்வுலகில், அதுபோல் ஒன்று நேர்ந்து விட்டால் இரவலர் வாழ முடியாதே' என்ற அச்சம் அவர் உள்ளத்தில் எழுந்தது. உடனே, பிட்டன் உடலில் சிறுபுண்ணும் உண்டாதல் கூடாது. அவன் உள்ளங்காலில் முள் தைப்பதும் கூடாது என்று கருதினார். அந்நிலை வாய்க்கும் வண்ணம் வாய் திறந்து வாழ்த்தினார். பீட்டன் உயிர் வாழ்வில் அக்காலப் புலவர் பெருமக்கள் காட்டிய பேரார்வம் என்னே!

இன்று செலினும் தருமே; சிறுவரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தளன் என்னாது, துன்னி
வைகலும் செலினும் பொய்யல னாகி
யாம் வேண்டியாங்கு எம்வறுங்கலம் நிறைப்போன்
தாம் வேண்டியாங்குத் தன் இறை உவப்பு
அருந்தொழில் முடியரோ, திருந்துவேல் கொற்றன்!
இனம்மலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களம்மலி நெல்லின் குப்பை வேண்டினும்
அருங்கலம் களிற்றொடு வேண்டினும்
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே,
அன்னன் ஆகலின், எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உறாற்க தில்ல!
ஈவோர் அரிய இவ்வுலகத்து
வாழ்வோர் வாழ, அவன்தாள் வாழியவே!