பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஒழிந்த நாளின் பெரும்பகுதி அனைத்தும், தன்னையும் முல்லைக்கொடி மலர்ந்து மணக்கும் தன் கோடை மலையையும் பாடிவரும் பாணர், பொருநர், புலவர் போலும் வறியோர்க்கு அவர் விரும்பும் பொருள்களை வாரி வாரிக் கொடுப்பதிலேயே கழிந்தது. இதனால் அவன் புகழ் பைந்தமிழ்நாடு முழுதும் பரவியிருந்தது.

பண்ணியின் புகழைக்கேட்டார், பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் பெருந்தகையார். பழங்மலைக்கு வடக்கில் உள்ள முதிரமலைக் கோமகனாகிய குமணன் அவைக்களப் புலவராய், அவன் புகழ் பாடிக் கொண்டிருந்தவர் அப்புலவர். அவர் கோடைப் பொருப்பிற்கு வந்து பண்ணியைக் கண்டு பாராட்டினார். ஆனால் புலவர் வந்திருந்தபோது பண்ணி யானைகளைப் பழக்கும் பணிமேற் கொண்டிருந்தான் போலும். அதனால் வந்த புலவர்க்கு,அவர் வருகை புரிந்த போதே வாரி வழங்கத் தவறி விட்டான். அவ்வளவே, புலவர்க்கு வந்துவிட்டது கோபம்."பண்ணி! கொடுப்பவர் மூவேந்தர்களே என்றாலும்,அவர் கொடுக்கும் பொருள் எண்ணியவெல்லாம் அடையத் துணைபுரியும் மலை போன்ற மாநிதியே என்றாலும், அளிக்கும் அவர் உள்ளத்தில், எம்பால் அன்பு தோன்ற, அதன் பயனாய்க் கொடுக்க முன்வராது, பாடிப் பரிசில் வேண்டுகிறார்கள் புலவர்கள். கொடுக்காது போனால்,பழித்துக்கொண்டே போவார்கள் என்று. எண்ணித் தருவார்களேயானால், அவர் அளிக்கும் மலையனைய அம்மாநிதியை மதிக்க மாட்டோம். வறுமை எவ்வளவுதான் வருத்தினும் அதைப் பெற்றுக் கொள்ள விரும்போம். எங்கள்பால் அன்பு கொண்டு அளிப்பார் அளிப்பனவற்றையே, அது அளவால் சிறிதே எனினும் அவற்றையே பெற்று மகிழ்வோம். புலவர்கள்பால் பேரன்புடையான் பண்ணி எனப் பலரும் கூறினார்கள். அதனால் உன்னை