பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அழைக்கப்பெறும் அவன், சிறந்த ஆண்மையாளன். பெரிய கொடையாளன். அவனுக்கு மக்கள் இருவர். அவர்கள் குழவிப் பருவத்தினராய்த் தவழ்ந்து கொண் டிருக்கும் காலத்தில், காரியொடு பகைகொண்டிருந்த கிள்ளிவளவன் என்ற சோணாட்டரசன் அக்குழவிகள் இரண்டையும் கைப்பற்றிச் சென்று தன் பட்டத்து யானையின் காலின்கீழ் இட்டுக் கொல்லத் துணிந்தான். மலையமான் மக்கள், உறையூர் மன்றத்தின் இடையே தனித்து விடப்பட்டனர். பட்டத்துயானையைக் கட்ட வீழ்த்து விட்டு விட்டார்கள். அதுவும் அப்பச்சிளம் குழவிகளை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அக்கொடுமையைச் சுற்றி நின்று கண்டுகளித்திருந்தார்கள் சோணாட்டு மக்கள்

அச்செய்தி கேட்டார் கோவூர்கிழார் என்றபுலவர் பெருந்தகையார். வள்ளியோன் ஒருவன் மக்கள் கொலையுண்டு போவதை அவர் உள்ளம் விரும்பவில்லை. விரைந்து அவண் வந்து சேர்ந்தார். அந்நிலையில் அவ்விளங்குழவிகள் இரண்டும் முகமறியாமக்கள்முன் விடப்பட்டமையால் அழுவதும், தம்மை நோக்கி வரும் யானையின் பருவுருவம் கண்டு, அது தம்மைக் கொல்ல வரும் கொடுவிலங்கு என்பதை அறியாமையால் மகிழ்ந்து நகைப்பதும், மறுவலும் மன்றில் சூழ்ந்து நிற்பாரிடையே தம் தாயோ தந்தையோ இல்லாமை கண்டு இரங்கி அழுவதுமாக மாறி மாறிக் காட்சி அளித்தன. கொடுமை அறியாக் குழவிகளின் இன் முகம் புலவர் உள்ளத்தை மேலும் கவர்ந்து விட்டது. அரசனை அணுகினார்."வேந்தே! வாரிவழங்கும் வள்ளல்கள் குடியில் வந்தவன் நீ. புறா ஒன்றின் பொருட் டுத் துலைபுகுந்த பெரியோன் பிறந்த பெருமையுடையது உன் குடி, உன்னால் கொல்லப்பட இருக்கும் இம் மக்களோ, பாடிப் பிழைக்கும் புலவர்களின் வறுமை சண்டஞ்சி தன் பால் உள்ளவற்றை வாரி வாரி