பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அந்நிகழ்ச்சி திருக்கிள்ளிக்கு அளித்த புகழின் அளவு பெரிதாம். அப்புகழ், அவன் பெற்ற வாள்வடுக்கள் வழங்கிய புகழினும் பெருமையுடைத்தாம். அதனால், அவன் தோற்றம் காண வெறுக்கத் தக்கதாய்த் தோன்றினும், அவன் புகழ் கேட்க இனித்தது. அவனைக் காண வெறுப்பவர் ஒவ்வொருவரும் அவன் புகழைக் கேட்கத் துடித்தனர்.

ஆனால், அவன் பகைவர் நிலையோ இதற்கு முற்றி லும் முரணாம். புண் எதுவும் பெறாமையால் அவர் மேனி பொன் என மின்னிற்று என்றாலும், போர்க் களம் விட்டுப் புறங்காட்டி ஓடி மறையும் அவர் செயல் பலராலும் இழித்தும் பழித்தும் பேசப் பட்டது. அவர் பெயரைக் கேட்கவும் நாணினார்கள் நாட்டு மக்கள் அவர்தம் வடிவழகைக் காண, விரும்பிய ஒருசிலரும், அவர் செயல் கேட்கப்பெறாது. காதுகளைப் பொத்திக்கொண்டனர்.

திருக்கிள்ளியின் இப்பெருமையையும், அவன் பகைவரின் சிறுமையையும் கண்டார் ஒரு புலவர்; கிள்ளியைப் பாராட்டிப் பாடவேண்டும் என்ற பெருவேட்கை கொண்டார்; உடனே சென்று கிள்ளியைக் கண்டார்.

"கிள்ளி! உன் புகழ் என் காதுக்கு இனிக்கிறது. என்றாலும், வடு நிறைந்த உன் தோற்றத்தைக் காண என் கண் கூசுகிறது. உன் பகைவர் பெறும் தோல்வியைக் கேட்க என் காது வலிக்கிறது என்றாலும், வடு விலா அவர் மேனி வனப்பைக் காண என் கண் விரும்புகிறது. அதனால் நீயும் ஒருவகையில் இனிமை உடையாய்; உன் பகைவரும் ஒரு வகையில் இனிமை உடையவரே. அதைப் போலவே வெறுக்கத்தக்க பண்பும் ஒவ்வொரு வகையால் இருவரிடத்திலும் பொருந்தியுளது.ஆகவே, உங்களுக்கிடையே வேற் றுமை எதுவும் இல்லை. உனக்கு எவ்வகையிலும்