பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7.திருக்குட்டுவன்


மூவேந்தர்களில், சேரர் குலத்தால் ஒருவரே எனினும், குடியால் பலராவர். குட்டுவர், குடவர், சேரலர், பொறையர் என அவர்கள், பிறந்த அக்குடி களால் பெயரிட்டு அழைக்கப் பெறுவர். சேரர் பேரரசு நிலவியநாடும், குட்ட நாடு, குடநாடு, கற்காநாடு, பூழிநாடு, மலாடுநாடு என்ற பல உட் பிரிவுகளை உடையதாகும். செந்தமிழ் மொழிவழங்கும் பன்னிரண்டு நாடுகளுள் இவையும் அடங்கும். இவற்றுள், மேலைக் கடற்கரையை ஒட்டி விளங்கிய நாடே குட்ட நாடு. குட்டநாட்டில், பண்டு, பைந்தமிழ் மொழியே பேசப்பட்டது என்றாலும், அந்நாட்டு மக்கள், அம்மொழியை அன்றே சிதைத்து வழங்கத் தலைப்பட்டுவிட்டார்கள். தமிழ் இலக்கண நூல்களுக்கு உரைவகுத்த ஆசிரியர்கள் "குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என அழைப்பர்" என்று கூறி அவர் மொழி வேறுபடுவதைக் காட்டிச் செல்வர்.

சேர இனத்தின் உட்பிரிவுகள் பலவற்றுள்ளும், அவ்வினத்துச் சிறந்த பேரரசர் பலரை ஈன்ற பெருமையுடையது குட்டுவர் குடியே. பல்யானைச் செல்கெழு குட்டுவன், கடல்பிறக் கோட்டிய சேரன் செங்குட்டுவன், குட்டுவஞ் சேரல்,நம்பி குட்டுவன் போன்ற பேரரசர்கள் அக்குடியில் பிறந்தவரே. ஆற்றல்மிக்க அரசர் பலரைப் பெற்றெடுத்த அக்குடி, அருந்தமிழ்ப்புலவர் சிலரையும் அளித்துளது.குட்டுவன் கண்ணனார், குட்டுவன் கீரனார் என்ற சங்கத்தமிழ்ப்