பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. நாஞ்சில் வள்ளுவன்

மிழகத்தின் தென்கோடியில், குமரி முனைக்கும் நாகர் கோயிலுக்கும் இடையில் ஒரு மலை உள்ளது. பாண்டியர்க்கு உரிமை உடையதும், பாண்டிய நாட்டுப் பெருவளங்களுள் சிறந்ததாகிய சந்தன மரங்கள் வளர்வதும், அகத்தியர் இருந்து தமிழ் ஆராய்ந்த அருமையுடையதுமாகிய பொதிகைமலைத் தொடர்களுள் அதுவும் ஒன்று. இக்கால மக்களால் மருத்துவமலை என வழங்கப்பெறும் அம்மலை, பண்டு பெற்றிருந்த பெயர் நாஞ்சில்மலை என்பதாகும். நஞ்சிலாமலை எனவும் ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்தது என்று, அம்மலை நாட்டில் இன்று வாழும் பெரியோர் சிலர் கூறுகின்றனர். அம்மலையை நடுவே கொண்டு விளங்கிய நாட்டிற்கும் நாஞ்சில் நாடு என அம்மலையின் பெயரே இடப்பட்டிருந்தது. அந்நாடு, அப்பெயரினாலேயே இன்றும் அழைக்கப் பெறுகிறது. நாஞ்சில் நாடு, நெல்லும் கரும்பும் விளையும் நல்ல வளம் மிக்க நன்செய் நிலங்களால் நிறைந்தது. அதனால் நன்செய் நாடு எனும் பெயரினாலும் அது அழைக்கப் பெற்றது. நன்செய் நாடு என்ற பெயரே, காலம் செல்லச் செல்ல நாஞ்சில் நாடு எனத் திரிந்து வழங்கலாயிற்று எனக் கூறுவாரும் உளர். நிற்க.

நாஞ்சில் நாடு நில நீர்வளங்களால் நிறைந்திருந்தது. நாஞ்சில் மலை, நீருண்ட மேகங்கள் வந்து படியுமளவு நனி மிக உயர்ந்த உச்சியைக் கொண்டது ஆதலின், அந்நாட்டில் காலம் மாறாமல் மழை பெய்யும். அதனால், ஆண்டுமுழுதும் ஓவெனும் ஒலி எழ விழுந்தோடும் அருவிகள், அளவிறந்து காட்சியளித்தன அம்மலையில், அதனால் காயும் கோடைக்