பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ix

நிலப் பகுதியிலும் காணப்படுகின்றன என்பதைத் திருவாளர் “லீக்கெயய்” (Leakyey) மற்றும் வேறு சிலரின் தொல்பழங்கால ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. சீன நாட்டு பீகிங் நகரத்து மனிதன் மற்றும் ஜாவா நாட்டு மனிதன் ஆகியோர், தமிழர்களைக் காட்டிலும் தொல்பழங்காலத்தவர் என மனித இன நூல் ஆய்வாளர், ஆய்ந்து நிலை நாட்டியுள்ளனர். நிலைமைகள் இதுவாக, இந்தியாவில் கி.மு. 3250க்கு முற்பட்ட முதிர்ந்த பண்பாடு இருந்தமைக்கான அகச்சான்று எதுவும் இல்லை. ஆனால், “பெர்டிலெக்ரெசென்ட்” நிலப்பகுதி கலைகளும், அறிவியல்களும், ஒப்புக் காண மாட்டா உயர்வினைக் கி.மு. 3000 ஆண்டளவிலேயே அடைந்துள்ளன. பின்லாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சிலர் மட்டுமே, சிந்து வெளிப்பண்பாட்டினைத் தமிழர் பண்பாட்டினோடு ஒருமை காண முயன்றுள்ளனர். தமிழரின் தொல் பழமையை நிலைநாட்டவல்ல, மனித இன ஆய்வுகள் மேலும் மேலும் நடைபெற வேண்டியுளது. உண்மையில், திருவாளர் தீக்ஷிதர் அவர்கள் அதுபோலும் அகவாழ்வு ஆய்வுகள் நடைபெற வேண்டும் என வாதாடியுள்ளார். அதற்கிடையில், கிடைத்துள்ள அகவாழ்வு ஆராய்ச்சிகளும் மொழியியல் உண்மைகளும் அளிக்கும் சான்றுகளிலிருந்து, துணிவான சில முடிவுகளைச் செய்துள்ளார்.

நடுநிலக்கடல் நாடுகள், மற்றும் தென்னிந்தியா இவற்றைச் சேர்ந்த மொழிகள், நாகவழிபாடு, இலிங்க வழிபாடு, தாய்வழி உறவு, மற்றும் தேவதாசி முறைபோலும் சமுதாய அமைப்புகள் இவற்றிற்கிடையேயான ஒருமைப்பாடு, திராவிடர்கள், அந்நாடுகளிலிருந்து இங்குக் குடிவந்தனர் என்பதைக் காட்டிலும், தமிழர்கள் அந்நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர் என்பதன் விளைவே என ஆய்ந்து முடிவு செய்துள்ளார். திருவாளர்கள், டாக்டர் லஹோவரி, பேராசிரியர் டி.பி. பாலகிருஷ்ண நாயர்,