பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தமிழர் தோற்றமும் பரவலும்


நெடுந்தொலைவு ஓடவல்லதாம் என்பது கருத்தில் கொள்ளத் தக்கதாம். திருவாளர் ஜே. ஹோலன் ரோஸ் (J. Holland Rose) அவர்களின் ‘மனிதனும் கடலும்’ என்ற ஆங்கில நூலைக் காண்க. (பக்கம்: 168:173-74)

17) திருவாளர் பெர்ரி (W.J. Perry Page : 24) அவர்கள் கூற்றுப்படி, நீர்ப்பாசனம் மற்றும் உழவுத் தொழிலைக் கண்டுபிடித்த முதல் நாடு எகிப்துதான் என்ற கொள்கை நிலைத்து நிற்கக்கூடிய தொன்றன்று. தொல் பொருள் ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரிந்த அப்பழங்காலம் முதல் தென்னிந்தியாவில் உள்ள காவிரி ஆற்றுப்படுகை நெல் விளைத்தலிலும், சிந்து நதிப் படுகை, கோதுமை விளைத்தலிலும் சிறந்து விளங்கின. (பக்கம் : 24).

சிந்து நதிப்படுகையில் கி.மு. மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்த செப்பு மற்றும் பித்தளை நாகரீகத்து மக்கள், பேரீச்ச மரங்களைப் போலவே, கோதுமையையும், பார்லியையும் விளைவித்தனர். அவர்கள் இமிலேறு, எருமை, குறுகிய கொம்புடைய எருது, ஆடு, பன்றி, நாய், யானை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றைப் பழக்கி வைத்தனர். ஆனால், பூனை, பெரும்பாலும் குதிரை அவர்களுக்குத் தெரியாத விலங்குகள்.

போக்குவரத்துக்கு, ஐயத்திற்கு இடமில்லாமல், எருது பூட்டப்பெற்ற ஈருருளை வண்டிகளை அவர்கள் பெற்றிருந்தனர். உலோகங்களில் பொருள் செய்யவல்ல நன்கு தேர்ந்த கைவினைஞர்கள் ஆங்கு இருந்தனர். அவர்களிடம் பெருமளவில் பொன்னும் வெள்ளியும் செப்பும் இருந்தன. ஈயம் கூட இருந்தது. வெள்ளீயம் பழக்கத்தில் இருந்தது. ஆனால், அது, வெண்கலம் உலோகத்தைச் செய்யும் கலவை உலோகமாகவே பயன்பட்டது.