பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

141


உரியதாகக் கூறத்தக்கதான சுமேரியநாட்டுக்கிஷ் (Kish) பகுதியில் காணப்பட்ட, வைடூரிய மணிக்கல் ஜெபமாலைகள் குறித்து அதுவே கூறப்படல் வேண்டும்.

21) தாய்க்கடவுள் வழிபாடு:

மண்ணைக் கடவுளாக உருவகித்து வழிபடுதல் பழங்கால மக்களிடையே பரவலாக இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த பண்டைய ஆரியர்களிடையே வானும் நிலனும், வாழும் உயிர்கள் அனைத்திற்கும், தந்தையும் தாயும் என்ற நிலையில், “டியயுஸ்” (Dvaus) மற்றும் “பிர்திவி” (Prthiv) என்ற பெயர்களில் கணவனும் மனைவியுமாகக் கற்பிக்கப்பட்டனர். அதர்வ வேதத்தில், ‘பிர்திவி’ யான பெண் தெய்வத்தை நோக்கிப் பாடப்பெற்ற அழகிய நெடிய பாட்டு ஒன்று உளது (திருவாளர், தீக்ஷிதர் அவர்களின் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாகிய லலிதவழிபாடு என்ற ஆங்கில நூலைக் காண்க.) பண்டைய கிரேக்கர்களிடையே, உண்மையான நிலத்தெய்வம் மூலப் பொருளாம் நிலமாவதும், கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, அறம் உரைக்கும் புலவனாம் ‘எஸிஓட்’ (Hsiod) காலம் முதல் உள்ள எழுத்தாளர்களால், அதே பொருளில் ஆளப்பட்டதுமான, “கய” (Gaia) அல்லது “கி” (Ge) என்பதாம். நிலமகள் வழிபாடு, டெல்பி (Delph) ஒலிம்பியா (Olympia) மற்றும் டொடொனா (Dodona) போலும் கிரேக்க நகரங்களில் நனிமிகப்பழைய வழிபாடாம் பண்டை உரோமானியர், கருவுற்றிருக்கும் பசுவைப் பலி கொடுத்து நிலமகளை வழிபட்டனர். நிலத்தெய்வம், உரோமப் பழங்கதைகளில் வரும், நவதானியப் பெண் தெய்வமாம் செரொஸ் (Ceres) அல்லது “டெமெடெர்” (Demeter) என்ற தெய்வத்தோடு இணைத்துக் காணப்பட்டது.