பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

5



அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், அதுவே முடிந்த முடிவாகி விட்டதாகவும் தோன்றுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் மராட்டி மொழி பேசும், தென்னிந்தியப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும், பண்டைத்திராவிடரின் வழிவந்தவர் என்ற கோட்பாடு மேற்கொள்ளப்பட்டது. இனம் பற்றிய கண்ணோட்டத்தில், பொதுவாகப் “பஞ்சமர்” (இப்போது அரிசனங்கள், என்ற பெயரால் அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்கள்) ஆதிதிராவிடர்களாகப் பெயர் சூட்டப்படும்போது, பிராமணர்கள், ஆரிய இனத்தவராகக் கருதப்பட்டனர். அவ்வாறு கொள்வதால் ஆம் உய்த்துணர்வு, திராவிடர்கள், தென்னிந்தியாவுள் நுழைந்து பெருமளவில் நிலைத்த குடியினராய் வாழத் தொடங்குவதன் முன்னர், காடுகளில் வாழ்ந்தவரும், நாகரிகம் அற்றவரும், படையெடுத்து வந்தவர்களால் வென்று அடிமை கொள்ளப்பட்டவரும் ஆன அந்நாட்டுப் பழங்குடியினர், ஆதித்திராவிடர்கள் என அழைக்கப் பெற்றனர். திராவிடர்களைப் போலவே, ஆரியர்களும், இந்தியப் பெருநாட்டிற்குப் படையெடுத்து வந்தவர்கள் என்ற கொள்கை, பொதுவாக இன்று நிலவுகிறது. இந்த நாட்டிற்கு ஆரியர்கள் படையெடுத்து வந்ததற்கு நனிமிக நீண்ட காலத்துக்கு முன்னரே, திராவிடர் படையெடுத்து வந்தனர் என்ற கொள்கையும் மேற்கொள்ளப்பட்டுளது. இக்கோட்பாட்டிற்கு ஆதரவாக வேத இலக்கியங்களில், குறிப்பாக, ரிக்வேத சமிதாக்களில் குறிப்பிடப்படும் தஸ்யூக்கள் மற்றும் தாஸர்கள், படையெடுத்து வந்த ஆரியப் பெருங்கூட்டத்தால், வெற்றி கொள்ளப்பட்டு, அடிமைகளாக மாற்றப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. இது பற்றி, நாம் பின்னர் ஆராய்வாம். இதற்கு ஆதரவாகக் கூறப்படும் சான்றுகள் போதுமானவை அல்ல; முடிந்த முடிவாக ஏற்றுக்கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறுவது, இப்போது போதும்.