பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

9



கி.மு. நாலாயிரத்தாண்டில், பழம்பெரும் நாகரீகத்தின் பிறப்பிடமாம், தென் மெசபடோமியாவில் உள்ள சுமர் (Sumer) என்ற பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட உருவச்சிலைகள், வெட்டு ஓவியங்களின் ஆய்வு, மனித உடல் கூற்று ஆய்வின்படி அவை, தென்னிந்திய மாதிரிகளாம் எனக் காட்டுகிறது. சிந்துவெளிக் கண்டுபிடிப்புகளுக்கு முன்பே, டாக்டர் ஆல் (Dr. Hall) அவர்கள், எந்த ஒரு புதுக்கருத்தை அள்ளி வீசினாரோ, அது பல்வகையாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆகிவிட்டது. சுமேரியர்கள் சிந்துவெளிமக்களே என்பது ஒட்டுமொத்த முடிபாம். அவர்கள், நிலவழியாகவும், கடல்வழியாகவும் பர்ஷ்யாவைக் கடந்து, துருக்கியில் தோன்றிப் பர்ஷிய வளைகுடாவில் சென்று கலக்கும் யூபிரடஸ் (Euphrates) டைகிரிஸ் (Tigris) ஆறுகளின் சமவெளிப் பள்ளத்தாக்கிற்குச் சென்றார்கள். செல்லும் வழியில் தென்மேற்கு ஈரான் நாட்டின் ஒரு பகுதியாகிய ஏலம் (உடூச்ட்) என்ற பழம்பெரும் நாட்டில், நாகரீக விதைகளை விதைத்துச் சென்றனர். சுமேரியர்கள், மற்றும் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு மக்களின் உடற்கூற்று மாதிரிகள் தென்னிந்திய மாதிரிகளாம் என்றால்-இது மறுக்க முடியாத, முரண்பாடற்ற ஒன்று-சிந்துவெளி மக்கள் சிந்துவெளிப்பள்ளத்தாக்கிலிருந்து திராவிடத்திற்கும், திராவிடர், திராவிட நாட்டிலிருந்து சிந்துவெளிக்கும், மக்கள் குடிபெயர்ச்சி இருத்தமைக்கு எல்லாச் சான்றுகளும் உள்ளன. இந்தக் கருத்து எதிர்பாரா இடத்திலிருந்து உறுதிப்படுத்தும் சான்றினையும் பெற்றுளது. ஒனெஸ் (Oannes) என்னும் மனித மீன், நாகரீகக்கலைகளையும் உடன் கொண்டு பர்ஷீய வளைகுடாவைக் கடந்து, எரிடு (Eridu) போலும் சுமேரிய நகரங்களை அடைந்தது என்ற கற்பனைக் கதை, மேலே கூறிய முடிவுக்கு, மேலும் வலுவூட்டுகிறது. பின்னர்ப் பஞ்சாபி நோக்கிய அலை வீசியிருக்குமாயின், திராவிட-மத்திய தரை இனக்கொள்கை, தோல்வியுற்றுப்போகிறது.