பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

23


பக்கங்களில் கடலாலும் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும். அப்படி என்றால், ஆந்திர தேசம் அல்லது மைசூர் மற்றும் கன்னடங்களின் ஒரு பகுதி, தமிழ் நாட்டோடு சேர்க்கப்படவில்லை என்பது பொருள். தமிழகம் முழுவதையும் தனக்கே உரிய இயல்பில், ஐந்து இயற்கைப் பிரிவுகளாக அதாவது திணைகளாகப் பிரித்திருப்பது: (குறிப்பு 24) வாடைக்குளிரைப் புகழ்ந்து, பாலை வெப்பத்தை வெறுத்தல், ஆசியாவில் உள்ளதுபோலும் மேட்டுச் சமவெளிகள் இல்லாமை, பண்டை பாபிலோனிய நாடாகிய “சால்டியன்” (Chaldean) நாட்டுக் கொடிமுந்திரியும் அத்தியும் இல்லாமை, சங்க இலக்கியங்களில் தன் நாட்டுக்கே உரிய மாவடை, மாவடைகள் குறிப்பிட்டுள்ளமை ஆகிய இவை அனைத்தும், தென்னிந்திய நாகரீகத்திற்கே உரிய, தனிப்பண்புகளைச் சுட்டுவனவாம்.

தொல்பொருள் ஆய்வுத்துறை அளிக்கும் சான்று

முறையாக அகழ்ந்து ஆராய்ந்தால், மிகச் சிறந்த நல்ல பலன் அளிக்கவல்ல, நனிமிகப் பழைய இடங்கள் தென் இந்தியாவில் இருக்கவும், தொல்பொருள் ஆய்வுத் துறை, அதில் சிந்தனை செலுத்தாமல் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடந்துகொள்வது வருந்தத்தக்கது. இவ்வழியில் நல்ல பல பணிகள் ஆற்றிய முன்னோடி, புதியன காணும் முயற்சியாளர். திரு. புரூஸ் புட்டே (Bruce Foote) (குறிப்பு: 25) அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நீலகரியின் வரலாற்றுக்கு முந்திய நிலைகுறித்த, தம்தம் ஆய்வில், திருவாளர் பிரிக் (Breeks) (குறிப்பு: 26) அவர்கள் ஆற்றிய பணியும், மற்றும் திரு. அ. ரே. (A. Rea) அவர்கள் ஈண்டுக் குறிப்பிடத்தக்கவராம். தொல்பொருள் சிறப்பு வாய்ந்த இடங்களை ஆய்ந்து அறிய உளமார்ந்த உண்மையான முயற்சி மேற்கொண்ட இவர்கள் போலும் தொடக்ககாலத் தொல்பொருள் ஆய்வாளர்கள் அளித்திருக்கும்