பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தமிழர் தோற்றமும் பரவலும்


சான்றுகளின் வலிமையே, என் ஆய்வுக் கட்டுரைக்கு நான் அடிப்படையாகக் கொண்ட மெய்யான பயன்மிகு அகச் சான்றுகளாம். திருவாளர் புரூஸ்புட்டே அவர்கள், ஏனையவற்றிற்கு இடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் தாம்பிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள ஆதிச்ச நல்லூரில், நூற்றுப் பதினான்கு ஏக்கர்களுக்கும் மேலான, மிகப்பரந்த இடத்தில் உள்ள, மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய, பிணம் புதை குழிகளை ஆராய்ந்தார். ஆதிச்ச நல்லூரில் உள்ள இப்புதை குழிகள், புதிய கற்காலத்தை அடுத்துவந்த இரும்புக் காலத்தனவாகக் கொள்ளப்பட வேண்டும்; இவற்றிற்குக் குறிப்பிடத்தக்க இணையான புதைகுழிகள், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சிற்றூர்க்கு அடுத்த இடங்களிலும், பழநி மற்றும் ஆனை மலைச் சரிவுகளிலும், நீலகிரியிலும், கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தென் ஆற்காடு, அனந்தப்பூர், பெல்லாரி மற்றும் கர்னூல் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.

பழங்கற்கால மனிதன் வாழ்ந்த இடங்கள் எவையும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் கல்லில் செய்யப்பட்ட கலைத்தொழில் வேலைப்பாடு அமைந்த, அவர்களின் கருவிகள், நான் முன்பே கூறியது போல், தென் இந்தியப் பழங்கற்கால மனிதன், ஏனைய நாட்டுப் பழங்கற்கால மனிதனைப்போல், அறவே நாகரீகம் அற்றவன் அல்லன் என்பதை உய்த்துணரக்கூடிய அளவு, எண்ணிக்கையாலும் அளவிறந்தன! வகையாலும் அளவிறந்தனவாம். பழைய கற்கால மனிதனின் கருவிகள் பெரும்பாலும் தென் இந்தியாவில் எளிதில் கிடைக்கும் கனிமமாம், படிகக்கல்லில் செய்யப்பட்டன. (குறிப்பு : 28). பெல்லாரிக்கு அணித்தாக உள்ள, தஷிண பீடபூமியிலும், மற்றும் மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியிலும், பெருமளவில்