பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

25


கண்டெடுக்கப்படும் பழங்கற்கால மனிதனின் கருவிகள், சிவப்பு மஞ்சள் அல்லது பழுப்புநிற மணிக்கல், சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரக் கனிமப் படிகக்கல் ஆகியவற்றில் செய்யப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட பழங்கற்காலக் கருவிகளில் பத்துக் கருவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை, பல்வேறு வடிவுடையவாயினும், முன் வரிசையில் வைக்கப்படுவன கூரிய நீண்ட உருளை வடிவங்களாம். அந்தப் பத்தாவன: கோடரி, ஈட்டி, மண் அல்லது மரம் தோண்டு கருவி, வட்டவடிவான கருவி, கைக்கோடரி, கத்தி, தோல்மெருகிடும் கருவி, சலாகை, மற்றும் சம்மட்டி, தென்கடல் தீவுகளில் வாழ்பவர்கள் செய்வதுபோல், முதியவர்கள் தீயின் உதவியால், அடிமரத்துண்டங்களைக் குடைந்து வள்ளம் எனப்படும் சிறுபடகுகளைச் செய்யும்போது, நீண்ட முட்டை வடிவினதான வெட்டுக் கருவியின் முனை, கரிந்து போன மரப்பட்டைகளின் மிகை நீக்கிச் செப்பம் செய்யவல்ல கைக்கு அடங்கிய நல்ல கருவி ஆகும். புதிய கற்கால மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த கருவிகளில் ஒன்றான, தோல் மெருகிடும் கருவி, பழைய கற்கால மக்கள் வேட்டை ஆடிக் கொன்ற விலங்குகளின் தோல்களைப் பயன்படுத்தினர் என்பதைக் காட்டுகிறது. தீயைப் பயன் கொள்ளுதல் தெரிந்திருக்கவேண்டும் என்பது ஊகித்து அறியப்படுகிறது. என்றாலும், நெருப்பு அல்லது மட்பாண்டத் தொழில் இருந்தமைக்கான அறிகுறி எதையும் நாம் காணவில்லை. ஆனால், அவர்தம் கருவிகள் வடிக்கப்பட்டிருக்கும் திறன், மற்றும் வேலைப்பாடுகளிலிருந்து அவர்கள் மதிக்கத்தக்க அளவு கலைத் திறம் வாய்ந்த மக்களே என்ற முடிவுக்கு வந்துள்ளார், திருவாளர் பூருஸ் புட்டோ (Bruce Foote) அவர்கள். பற்பல இடங்கள் பழங்கற்காலப் பொருள்களைத் தந்துள்ளன என்றாலும், அலிகூர் (Alicoor) மலைக் குன்றுகளே சிறந்த மைய இடமாம்.