பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

மாந்தனின் பிறப்பிடம் தொல் பழந்தமிழகமே என்ற கருத்தை அண்மைக் காலத்தில் பெரிதும் வலியுறுத்தி வந்தவர் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் ஆவர். அவர் பெரிதும் போற்றியவர்களுள் ஒருவர் பேராசிரியர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர். அதிலும் குறிப்பாக, தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற இந்த நூலை எழுதியமைக்காகவே பாவாணர் அவரைப் பெரிதும் போற்றினார்.

தமிழர் எங்குத் தோன்றினர் என்பது பல்லாண்டுகளாக விடை காண முடியாத வினாவாகவே உள்ளது. தமிழகத்தின் தென் பகுதியில் ஆழ்ந்து போன குமரிக் கண்டத்தில் தோன்றினர் என்பர் சிலர். அவ்வாறன்றி மைய ஆசியக் கண்டத்தில் தோன்றித் தமிழகத்தில் குடிபோனவர் என்பாரும் உளர். இந்த ஆய்வுக்கு இன்னும் சரியான விடை காண இயலவில்லை. குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததேயில்லை என்பர் சிலர். ஆனால் அண்மையில் கடலில் ஆழ்வகழ்வாய்வு செய்த சோவியத் நிலவியலறிஞர்கள் குமரிமுனையில் நிலப்பரப்பு நீரில் ஆழ்ந்ததற்குச் சான்றுகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். தொல் ஊழிக் காலத்தில் ஆஸ்திரேலியா, இந்தியாவின் தென்பகுதி, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் ஒன்றாக இணைந்திருந்தன என்ற கருத்து அண்மையில் ஆய்வுவழி வலுப்பெற்று வருகிறது.

எது எவ்வாறிருப்பினும் இத்தகைய ஆய்வுகளுக்குத் துண்டுகோலாகப் பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய