பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

37



இவ்வகையில், தொல்பழம் நாகரீகங்கள் எல்லாம், தமக்குள்ளாகவே, ஒன்றிடமிருந்து ஒன்று கடன் வாங்கப்பட்ட நாகரீகம்தான் என்பதைக் காண்கிறோம்; ஆனால், திருவாளர் ஹெரோடோடஸ் (Herodotus) அவர்கள் விட்டுச்சென்ற அனைத்து அகழ் ஆய்வுகளும் அவற்றின் முடிவுகளும், கிரேக்க, மற்றும் எகிப்திய நாட்டுத் தொல்பழம் நாகரீகத்தின் வடிவமைப்பாளர்கள் யாவர்? காரணகர்த்தர் யாவர்? என்பதை அறிய, நல்ல வழிகாட்டியினை நமக்கு அளிக்கவில்லை; அவை இரண்டுமே, வெளியிலிருந்து வந்து குடியேறியவை என்ற அழுத்தமான மரபுவழிக்கொள்கையை உடையன. அவை ஆரியமொழி எதையும். அதாவது ஆரிய அடிப்படை எதையும், பேசவில்லை. அங்ங்னமாகவே, அவை தொல்பழங்காலத் திராவிட நாகரீக மரத்தின் கிளைகளே என்பதுதான் கொள்ளக்கிடப்பதாம். கிரீட், பித்தளை மற்றும் செப்பு நாகரீகத்திலிருந்து, எத்தகைய இடையறவும் இல்லாமல், இரும்பு நாகரீகத்துக்குச் சென்று விட்டது. இந்தியாவிலும், நடந்தது சரியாக இதுவே. பித்தளை நாகரீகம் என்பது போலும் ஒரு நாகரீகம், இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இச்சூழ்நிலைகளையெல்லாம் கணக்கில் கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த, தொல்பழம் நாகரீகம், திராவிட மொழிகள் பேசும் தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவை என்பதை எவனொருவனும் உய்த்துணரலாம். மொழி இடம் பெயர்ந்தது. அம்மொழியோடு, அம்மொழி பேசும் மக்களும் குடிபெயர்ந்தனர். ஆகவே, எதிர்கால நாகரீகம், மத்தியதரைக் கடல் கடற்கரையில் பிறக்கவில்லை; மாறாக, இந்தியத் தீபகற்பத்தின் கடற்கரைகளில், காவேரி, தாம்பிரபரணி, பெரியாறு, அமராவதி மற்றும் கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா போலும் பேராற்றங்கரைகளிலேயே பிறந்தன என்பதே என் ஆய்வுக் கட்டுரையின் முடிவாம்.