பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண்ணில்.... இந்தியா

55



அங்குமிங்குமாக வாழ்ந்து வந்த தென்னிந்தியத் தீபகற்பத்தில் குடியேறினர்.

வட இந்தியாவில் வந்து தங்கிவிட்ட, மத்தியதரைக் கடல் பகுதியைச் சார்ந்த ஒரு சில வந்தேறிகள், காலப்போக்கில், வட இந்தியாவில் செல்வாக்குப் பெற்றிருந்த திராவிடர்களுக்கு முந்திய இன மக்களிடையே மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டனர். திராவிடர்களின் ஆதிமூதாதையர் என நம்மால் அழைக்கப்படுபவர்களும், அவர்களின் வழிவந்தவர்களும் ஆகிய தென்னிந்தியாவில் வந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர், ஆஸ்திரேலிய ஆதிமுன்னோர்களின் ரத்தத்தோடு கலந்த ரத்தக் கலப்பைப், பையப்பையப், பல்வேறு அளவில் பெற்று, மேலும் காலம் செல்லச்செல்ல, திராவிட நாகரீகம் என இன்று நாம் அழைக்கும் ஒரு நாகரீகத்தைத் தோற்றுவித்தனர். நிலைத்த சிற்றுர் வாழ்க்கை, சிற்றுர் அமைப்பு, சிற்றுர் அரசப்பணியாளர், சிற்றுர்க் கடவுள்கள், சிற்றுர் அறங்கூறு அவை ஆகியவற்றைப் பெற்றிருப்பதற்கு இந்தியா, அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது. (Journal of the Bihar and Orissa research Society Vol.XXIV 1958, Page, 37.38.)

13) முண்டா மொழிகள், சந்தால்பர்கனா, மத்திய மாநிலம், வடசென்னை, அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பெருவழக்காம். முண்டா மொழிகளோடு இனத் தொடர்புடைய மொன்-கமெர் (Mon-Khmer) என்ற குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள், பர்மா, மலேயத் தீபகற்பம், அன்னம், கம்போடியா, மற்றும் நிக்கோபார் தீவுகளில் பேசப்படுகின்றன. திராவிடமொழிக்குடும்பம், தமக்கே உரிய பற்பல சிறப்பியல்புகளைக் கொண்ட மொழிகளின் கூட்டமாம் என்ற, திருவாளர் ஸ்டென் கொனெள (Sten Konow) அவர்களின் கூற்று சரியானதே (Encyclopaedia Brittanica, 14th Edition Vol. XV, P.957-58).