பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தமிழர் தோற்றமும் பரவலும்


இல்லை. முதலாம் இராஜராஜன், வடஇலங்கையை வெற்றி கொள்ளும் வகையில் அது விட்டு வைக்கப்பட்டது. முதலாம் இராஜேந்திரன், சோழ அரசை இலங்கைத்தீவில், நல்ல வலுவாக நிறுவினான். ஆனால், முதலாம் குலோத்துங்கன், சோழர் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொள்ளும் முன், சோழ நாட்டில் இருந்த அரசியல் குழப்பத்தைப் பயன் கொண்டு இலங்கை அரசன் விஜயபாகு, கி.பி. 1070 தன்னைத் தனியரசன் ஆக்கிக்கொண்டான். இலங்கையில் தென்னிந்திய அரசர்களின் செல்வாக்கு எத்தகையதாக இருப்பினும், பண்பாட்டுச் செல்வாக்கு மட்டும் அழிவுற்றுப் போகாது வலுவாக இருந்துவந்தது. தன்னுடைய கலை, கட்டிடக் கலை, மற்றும் இலக்கியங்களைக் கற்றுக்கொள்ளக் காலமெல்லாம் தென்னிந்தியாவின் காலடியில் அமர்ந்திருந்தது இலங்கை. இலங்கை முழுவதும் பரவலாகக் கிடைக்கும் பத்தினி தேவி வழிபாடு மற்றும் கடவுள் திருமேனிகள் ஆங்கு இடம்பெற்றுவிட்ட தென்னிந்தியாவின் செல்வாக்கைத் தெளிவாக உணர்த்துகின்றன. சைவ சமயமும், சைவ நாயன்மார்களும், அங்கு நிலைத்த இடம் பெற்றுவிட்டனர். மாணிக்கவாசகர் காலத்தில், அதாவது கி.பி. 9வது நூற்றாண்டில், இலங்கையை ஆண்டுகொண்டிருந்த, புத்தமத அரசன் ஒருவன் சிதம்பரத்திற்கு வந்து சைவனாக மாறிவிட்டான். என ஒரு மரபுவழிச் செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சி, வட இலங்கையில், தமிழரசின் தோற்றம் வளர்ச்சிகளின் தொடக்க நிலையாம் எனக் கொள்ளலாம். (குறிப்பு-14) 1344ல் இலங்கைக்குச் சென்றிருந்த அரேபிய யாத்திரீகள் இபன் பதுதா (Ibn Batuta) இலங்கையை ஆண்டிருந்த தமிழ் அரசன், பர்ஷிய மொழியில் சிறந்த அறிவு வாய்க்கப் பெற்றிருந்தான் எனப் புகழாரம் சூட்டியுள்ளான். பிற்காலத்தே, இலங்கை, விஜயநகரப் பேரரசின் ஓர் அங்கமாகிவிட்டது. அக்காலம் முதல், அது தமிழ் நிலமாகவே