பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

85


இருந்து வந்துளது. இக்காலை, யாழ்ப்பாணமும், இலங்கையின் வடபகுதி அனைத்தும் சில குடியேறியவர்கள் தவிர்த்து, முழுவதும் தமிழர்களையே கொண்டுள்ளன.

ஆசியாவின் தென்மேற்கில், டைகிரஸ், யூபிரடஸ் ஆறுகளின் இடைப்பட்ட நாடாகிய மெஸ்படோமியாவில் வழங்கப்பெறும் “எலம்” (Elam) என்ற சொல், பெரும்பாலும், அங்கே குடிவந்தவர்களும், அந்நகரின் வளர்ச்சிக்குப் பொறுப்பானவர்களுமான இலங்கையர் கொடுத்ததாகத் தெரிகிறது. காரணம், இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும், இலங்கை, ஈழம் என அறியப்படவில்லையா? ஈழத்து மக்கள், பண்பாட்டு நிலையில், ஆசிய ஆப்பிரிக்கப் பண்பாடாம் செமிடிக் பண்பாட்டினார் அல்லர் மாறாகப் பாபிலோனியாவைச் சார்ந்த சுமேரியப் பண்பாட்டினர் ஆவர். அதே வழியில், சிற்றாசியா (Asea-Minor) நாட்டின் தெற்கே உள்ள நனிமிகப் பழைய நாடாம் “லிஷியா” (Lycia) வை அடுத்துள்ள “கரியா” (Caria) என்ற இடப்பெயரும், கேரள நாட்டவர், ஆங்குக் குடியேறிய பின்னர், “சேர” (Cera) என்ற சொல்லின் வடிவாம். வளைகுடாவை அடுத்து, ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியாம், சோமாலி நாட்டுச் சோமாலி மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான மொழி ஒருமைப்பாடு குறிப்பிடத்தக்கதாம். உலகப் பண்பாட்டிற்குப் பண்டைய திராவிடப் பண்பாடு அளித்த மதிக்கத்தக்க பங்கு, திராவிட மொழியினதாம். ஒரு சில மொழிகள் தவிர்த்துச். சொல்லோடு சொல், இடையில் எத்தகைய இடையீடுமின்றி இணையும் இயல்புடைய மொழிக் குடும்பங்கள் (agglutinative dialects) தங்கள் தாய் மொழிக்குப் பழந்தமிழ் மொழியை நோக்கியுள்ளன. திராவிட மொழியின் தொண்டு, பேச்சு வழக்கற்றிருந்த மக்களுக்குப் பேச்சுக் கற்றுக்கொடுத்ததாகக் கொள்ளலாம் அல்லவா?