பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலைகளை உலகெங்கும் பரப்பும் காற்று தனது வலுவிழந்த சிந்தனைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும். இலைகள் மண்ணோடு சேர்ந்து புதிய செடிகளுக்கு உரமாவது போல தனது சிந்தனைகளைப் புதிய உலகம் தோன்ற வழிகோல வேண்டும். தனது குரலைக் காற்று தனது வீணையாக மீட்டி, உலகெங்கும் அதன் நாதம் பரவச் செய்ய வேண்டும். தற்போது நீறு பூத்த அனல் போன்று செயல் வலிமை குன்றிக் கிடக்கும் தனது சிந்தனைகளைக் காற்று சுவாலை விட்டெரியச் செய்து, மாந்தர் மனங்களில் இருளை ஒட்டி ஒளிவீசச் செய்ய வேண்டும்.

"Scatter as from an
unextinguished hearth
Ashes and sparks, my words
among man kind"

இச்சிந்தனைகள் அவனுடைய சோர்வைப் போக்குகின்றன. இருண்ட பனிக்காலம் என்றும் நீடித்து விடாது. அது மறைந்து வசந்த காலம் தோன்றத்தானே செய்யும்? கவிஞனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. தனது குறிக்கோள் நிறைவேறும் என்ற உற்சாகம் தோன்றுகிறது. புதிய உலகத்தைப் பற்றிய கனவுச் சித்திரங்கள் மறுபடி அவன் உள்ளத்தில் எழுகின்றன.

".................of wind,
If winter comes can spring
be far behind?'

என்ற கேள்வியோடு பாட்டை முடிக்கிறான் ஷெல்லி.

ஷெல்லியின் கவிதைகளில் பாரதிக்கு ஈடுபாடு அதிகம். தன்னை அவன் பெருமையாக ‘ஷெல்லிதாசன்’ என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டதுண்டு. ஷெல்லியின் சமூக உணர்வும், மனிதாபிமானமும், புரட்சி மனப்பான்மையும், பாரதியின் உள்ளத்தைக் கவர்ந்தன. ஷெல்லியின் சொல்லாட்சியும், உவமைச் சிறப்பும், உள்ளத்தை அள்ளும் கவிதாவேகமும், சிந்தனைச் சிறப்பும், தூய்மையான உணர்ச்சிகளும், பாரதிக்கு ஷெல்லியின் மீது பெருமதிப்பை உண்டாக்கின.

108