பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திய நாட்டின் சூழ்நிலையில், தேசிய எழுச்சி தோற்றுவாய்க் கட்டத்தில் சிறு ஊற்றாகத் தோன்றிய காலத்தில் அதன் வளர்ச்சியைத் தீர்க்கதரிசனமாகக் கண்ட பாரதி, ஷெல்லியின் ‘சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்’ என்ற கோஷங்கள், வளர்ச்சிக்கேற்ற கோஷங்கள் என உணர்ந்தான்.

பாரதியின் வாழ்க்கை நிலையும், சுதந்திர இயக்கத்தின் ஆரம்பகால வேதனைகளும், பாரதியின் மனத்தில் வேதனையை உண்டாக்கின. ஆயினும் அவன் மக்கள் உணர்வோடு ஒன்றி நின்றதால் ஷெல்லியைப் போலச் சோர்வடையவில்லை. ‘என் நெஞ்சில் ரத்தம் பீறிடுகிறது.’ என்று எழுதவுமில்லை.

ஷெல்லியின் ‘மேல் காற்று’ என்ற கவிதைதான் பாரதியின் ‘காற்று’ என்னும் வசன கவிதைக்குக் கருவாக இருந்தது என்பதில் ஐயமில்லை. அவற்றில் காணப்படும் கருத்து ஒற்றுமை இதனை வலியுறுத்தும்.

ஆனால் பாரதியின் ஆழ்ந்த மனிதாபிமானமும் தன்னம்பிக்கையும், கொள்கைப் பற்றும் ஷெல்லியின் கவிதையில் அவ்வளவு முனைப்பாகக் காணப்படவில்லை.

இனி ‘காற்று’ என்னும் வசன கவிதையின் சிந்தனைப் போக்கைச் சுருக்கமாக அறிந்து கொண்டு பாரதிக்கும் ஷெல்லிக்கும் உள்ள ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராய்வோம். அவற்றின் அடிப்படையில் பாரதியின் தனித்தன்மை எது எனக் காண முயலுவோம்.

பாரதி கதை சொல்லத் தொடங்குகிறான். வீட்டு மேடையின் ஒரு பந்தலில் இரு கையிறுகள். கந்தன் வள்ளியம்மை என்பவை அவற்றின் பெயர்கள். இவை ஒன்றையொன்று நெருங்கித் தழுவிக் கொள்ளு கின்றன. காற்று நிற்கிறது. அசைவு நிற்கிறது. கவிஞன் முன் சோதி ரூபமாக வாயு தேவன் தோன்றுகிறான். கவிஞனுடைய கேள்விகளுக்கு விடை கூறுகிறான்.

‘நான் விழிக்கச் செய்கிறேன்’, அசையச் செய்கிறேன் நான் சக்தி குமாரன்.

109