பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வளவும் படர்க்கையாகக் கவிக் கூற்றாகக் கூறி அந்தக் கவிஞன் இனி முன்னிலையாகக் காற்றினிடம் பேச்சு தொடங்குகிறான். இது ஷெல்லியின் ‘ஒட்’ என்ற முன்னிலைப்பனுவலை ஒத்திருக்கிறது. ஷெல்லி காற்றின் ஆற்றலின் முன் செயலற்றிருக்கிறான். அது விரும்பினால் தான் அதன் மீது பறக்க முடியும். அதன் கருணையால் தான் அவனது சிந்தனைத் தீப்பொறிகள் உலக மக்களிடையே பரவி சுவாலை விட்டு எரிய முடியும். ஆனால் பாரதி காற்றிற்குக் கட்டளை இடுகிறான். காற்றிற்கு வணக்கமும் செலுத்துகிறான். வேத ரிஷிகளின் வணக்க முறையையும், தற்கால விஞ்ஞானிகளின் இயற்கையை வெல்லும் தன்னம்பிக்கையையும், பாரதி இணைக்க முயலுகிறான்.

‘காற்றே வா!
எமது உயிர் நெருப்பை நீடித்து
நல்லொளித் தருமாறு நன்றாக வீசு,
பேய் போல வீசி அதனை அவித்து விடாதே!
மெதுவாக நல்ல நயத்துடன் வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழி படுகிறோம்’

காற்று உலகிலுள்ள அழுக்கைப் போக்குகின்றான். அது போல உள்ளத்திலுள்ள அழுக்கையும் சுத்தம் செய்கிறான். அவன் வரும் இடத்தை மாந்தர் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

காற்று நொய்ந்தவற்றை அழித்து விடுவான். வலிமையுள்ள வற்றை மேலும் வலுப்படுத்துவான். அவனைப் பயன்படுத்த மனிதப் படைப்புகள் வலிமையாக இருக்கவேண்டும்.

‘ஆதலால் மானிடரே வாருங்கள்
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் செய்வோம்
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்து வோம்

112