பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைத்திருந்த நிலமான்ய முறையின் பிரமாணப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. கோயில் சாசனங்களின் முகவுரையில் பின்வரும் குறிப்புக் காணப்படுகிறது. ‘மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டி வந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர் சாசனம் கூறுகிறது.’

அவனது ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்து போயினமையால் அனுபோகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுக்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது என்னும் செய்தி தலைச் செங்காடு மூன்றாம் ராஜராஜனது பத்தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வாறு நடந்த கலகங்களை ஜாதிக் கலகங்கள் என்று காட்ட வரலாற்று ஆசிரியர்கள் முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை ஜாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள். நிலத் தொடர்புடைய ஜாதியர்கள் வலங்கைப் பிரிவினர் என்றும், கொல்லர், தச்சர், தட்டார் முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன் அளவர் முதலியோர் இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார், இவ்விரு ஜாதியினரையும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால் ஏதாவது ஒரு வகைப் பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன்வந்தால், அடுத்த பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமாயிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இடங்கைப் பிரிவினரோடு சேர்த்து கொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள். இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில் கலந்து கொண்டதுமுண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது ஆதிக்க அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.

118