பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோயில் சாசனங்களின் முகவுரையில், மேற்குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கிறது. ‘அரசாங்கம் அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது. இதே போல இடங்கை வகுப்பார்; அக்காலத்தில் ஏற்க வேண்டி வந்த வரிச்சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள ஓர் கல்வெட்டு’ அரசன் ஆணைக் கிணங்கக் கூடிய பெரிய சபையாரின் முடிவைத் தெரிவிக்கிறது. நிகரிலாச் சோழ மண்டலத்து 78 நாடுகளும் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வம்சம் தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவைக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும். அதனால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டியதில்லை என்று முடிவு கட்டினார்கள். அன்றியும் 18 விஷயங்களிலுமுள்ள நிலப்பகுதி வரி விகிதங்களையும் நிர்ணயித்து நிச்சயித்தார்கள். இக் கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளால் ஒவ்வொரு சமயம், நிலச் சுரண்டல் முறையையும், வரிச்சுமைகளையும், அதிகாரிகளின் கொடுமைகளையும், இடங்கை வலங்கைப் பிரிவினரில் ஏழை எளிய மக்கள் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஊரின் வாழ்க்கை முழுவதும், சோழ வம்சம் வீழ்ச்சியடைந்த காலம் வரை கோயில்களைச் சார்ந்தும், உழவுத் தொழிலைச் சார்ந்தும், சிறு தொழில்களைச் சார்ந்துமே இருந்தன. கோயில் நிர்வாகத்திலிருந்தவர்கள், ஊரிலுள்ள எல்லாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார்கள். இவ்வல்லமைக்குக் காரணம் கோயில் நிலங்களின் மீது அவர்களுக்கிருந்த ஆதிக்கமே. நிலவுடைமைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்குச் சொந்தமான மான்ய நிலங்களைப் பயிரிட்டே வாழ்க்கை நடத்தினர். சிற் சில சமயங்களில் இம்மான்ய நிலங்களை அதிகாரிகளின் உதவியோடு

119