பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரிய நிலச் சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர். நிலத்தை இழந்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை உயிர்த் தியாகம் செய்து காட்டிக் கொண்டனர். இதற்குச் சான்றாகப் பல கல்வெட்டுகள் தஞ்சாவூர் ஜில்லா, புஞ்சை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டு ஒன்று சில நிலங்கள் கோயிலுக்கே உரியன என்று நிரூபிப்பதற்காகச் சில கோயில் வேலைக்காரர்கள் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்து கொண்டனர் என்று கூறுகிறது.

தங்கள் உரிமைகளை நிலை நாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. கோயில் காரியங்கள் நடைபெறாமல் போனால் கோயில் வேலைக்காரர்களுக்கு ஊதியம் கிடைக்காது, அவ்வாறு கோயில் காரியங்களை நடத்தாமல் நிர்வாகிகள் வருமானத்தைத் தாங்களே சுவீகரித்துக் கொண்டபோது வேலைக்காரர்களது உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து அப்பாவு அய்யங்கார் என்பவர் உயிர் நீத்த செய்தியை இரண்டு கோயிற் சாசனங்கள் கூறுகின்றன.

இவ்வாறு கிராம நில அமைப்பு முறையை எதிர்த்துச் சிற்சில போராட்டங்கள் கடந்த ஆயிர வருஷ காலமாக நடை பெற்றிருந்த போதிலும், அயல்நாட்டு வியாபாரிகளின் வருகைக்கு முன்பு கிராம சமுதாய முறை பெரிய மாறுதல் எதுவுமின்றி நிலைத்திருந்தது. போர்த்துகீசியர் டச்சுக்காரர் வருகைக்குப் பின் கடற்கரைப் பகுதியிலுள்ள சமுதாய அமைப்பு மாறத் தொடங்கிற்று. வெளி நாட்டு வியாபாரத்திற்காகத் துணி, மீன், தானியங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கடற்படை வலிமையால் கீழ்க் கடற்கரைத் துறைமுகங்களை ஐரோப்பியர்கள் பிடித்துக் கொண்டனர். இலங்கை, இந்தோனேஷ்யா முதலிய நாடுகள் அவர்கள் கைவசப்பட்டிருந்ததால் கடல் வியாபாரத்தில் அவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மதுரை நாயக்கர்களது அரசு உள் நாட்டில் அரசியல் ஆதிக்கம் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் கடற்கரைப் பகுதிகளில் கிராம சமுதாய வாழ்க்கை அழிந்து போயிற்று. கிராமங்களை

120