பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனித்தனியாக தொழில் செய்து தங்கள் செய்பொருட்களை நெல்லுக்குப் பரிவர்த்தனை செய்து கொண்ட முறை நிலைகுலைந்தது. பொன்னும் பொற்காசுகளும் பரிவர்த்தனைக்குப் பொதுப் பொருளாயின. பொருள்களைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் ‘வணிகச் சாத்துக்கள்’ என்ற வணிகர் கூட்டம் தோன்றியது. இவர்கள் பொருள்களை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் ஒரு பகுதியில் இருந்து மற்றோர் பகுதிக்குக் காளைகள் மீதும், சகடங்கள் மீதும், பொருள்களை ஏற்றிச் சென்று விற்பர். உள்நாட்டு வாணிபம் பெருக, மன்னர்கள் சாலைகள் அமைத்தனர்.

இவ்வணிகச் சாத்தினர் பல பொருட்களை நாடெங்கும் பரப்பினர். ஆடைகள், அணிகலன்கள், தானிய வகைகள், மிளகு, பாக்கு, வாசனைத் திரவியங்கள் ஆகிய பொருட்களைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றனர். இவர்களுள் ஒரு பகுதியினர் பெரும் பொருள் திரட்டினர். அவர்கள் சமூகநிலை உயர்ந்தது. மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் குறுநில மன்னர்களின் உடைமையாக இருந்தன. செய்பொருட்களை ஆக்குபவர்கள் தொழிலாளிகள். அவர்களை ஒரிடத்தில் சேகரித்து அவர்கள் செய்து தரும் பொருட்களுக்கு விலை கொடுத்து வணிகர்கள் வாங்கினார்கள். ஆக, நிலத்தொடர்பு இல்லாத இரு வர்க்கங்கள் இப்பொழுது தோன்றத் தொடங்கின. வணிகர்களது செல்வாக்கு ஓங்க ஓங்க அவர்கள் மூலப்பொருள் உற்பத்திக்குச் சாதனமான நிலத்தின் சொந்தக்காரர்களது ஆதிக்கத்துக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டியதாயிற்று. அவர்களது நிலவுடைமையைப் பாதுகாக்கும் திட்டத்தையும் கொள்கையையும் காக்க வேண்டி வந்தது. அதற்காகக் கைத்தொழில் செய்யும் தொழிலாளரையும், விவசாயிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயன்றார்கள். இவ் வணிகர்கள் பெருங்குடி வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்த காலத்தைச் சிலப்பதிகாரம் சித்தரிக்கிறது. சமணமும், பெளத்தமும் இவர்கள் ஆதரித்த மதங்கள். அவை சமூக அடிமைத்தனத்தைத் தாக்குகின்றன. புத்த மதத்தையும் இவர்கள் ஆதரித்தார்கள். இவர்கள் காலத்தில் பெரு நகரங்கள் தோன்றின.


7