பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்திரிக்கப்பட்டுள்ளான். இக்கதை பரவியுள்ள தென்பாண்டி நாட்டில், மக்கள் இவ்வுயர்ந்த பண்புகளைப் போற்றி, முத்துப்பட்டனைத் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்.

சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ்பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனைப் பலி கொடுத்து விட்டார்கள்.

இத்தகை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது. கொடுமையைக் கண்டித்தும், கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது இப்பாடல்.

நல்லதங்காள்கதை

நல்லதங்காள் கதை தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கதை. இக்கதைப் பாத்திரங்கள் சிற்சில பண்புகளுக்குப் பிரதிநிதிகளாக இன்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளார்கள். உதாரணமாக கொடுமைக்காரியான அண்ணியை ‘மூளியலங்காரி’ என்று அழைக்கிறார்கள். இக்கதையில் வரும் மூளியலங்காரி, தனது கணவனின் தங்கையைக் கொடுமைப்படுத்தி, அவள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவள். தங்கையின் மீது அன்பாக இருக்கும் அண்ணனை இன்றும் இக்கதையில் வரும் அண்ணன் பெயரை வைத்தே நல்லண்ணன் என்று அழைப்பது வழக்கமாயிருக்கிறது. பஞ்சத்தால் தாய் வீட்டுக்கு வருகிறாள் நல்லதங்காள். தாய் தந்தையர் இல்லை. அண்ணன்தானிருக்கிறான். அவன் மிக நல்லவன். அவளையும், குழந்தைகளையும் பராமரிக்கிறான். அவன் வெளியில் சென்றிருக்கும் போது அவனுடைய மனைவி மூளியலங்காளி, குழந்தைகளையும், நல்லதங்காளையும் படாத பாடுபடுத்துகிறாள். அண்ணனும், தங்கையும், சிறுவயதில் வளர்த்த செடிகள் மரமாகிப் பழுத்திருக்கின்றன. பழங்களைப் பறிக்கக் கூடாதென்கிறாள் அண்ணி.

127