பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். வழியில் கெளதல மாடன் பூவாயியை வழிமறித்து அவளை வலிந்து தழுவ முயன்றான். பின்னால் வந்து கொண்டிருந்த பட்டாணியன் அதைக் கண்டு, கெளதல மாடன் மேல் பாய்ந்தான். இருவரும் போராடி உயிர்நீத்தனர். தன்னைக் கெடுக்க வந்தவனுக்கும், தன்னைப் பாதுகாக்க வந்தவனுக்கும், உயிர் போக தானே காரணமானதை எண்ணி பட்டாணியன் இடுப்பிலுள்ள கத்தியை உருவி தன் வயிற்றில் குத்திக்கொண்டு இறந்தாள்.

இக்கதை சாதி உணர்வு, மத உணர்வு இவற்றிற்கெல்லாம் மேலாக மானிட உணர்வைப் போற்றுகிறது. அது இந்தச் சாதிக்குத்தான் சொந்தம் என்று இல்லை. ‘குலத்தளவாகுமாம் குணம்!’ என்ற பிற்போக்கான பழமொழியை இக்கதை பொய்யாக்குகிறது. மானிட உணர்வு சாதி கடந்தது. இங்கே பட்டாணியனிடம் அது இருக்கிறது. தன் உடலின்புத்துக்காகத் தன் வலிமையைப் பயன்படுத்துகிறான் கெளதல மாடன். அதற்குக் குறுக்கே வந்த பட்டாணியனை எதிர்த்து மூர்க்கமாகப் போராடி அவனைக் கொன்றான். பட்டாணியன் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் மானத்தைக் காக்கப் போராடினான். அவனும் உயிர் நீத்தான். பட்டாணியனது வீரம் பிறருக்குப் பயன்பட முனைந்தது. மானிட உணர்வோடு கூடிய வீரம் கிராம மக்களால் போற்றப்படுகிறது.

வெங்கல ராசன் கதை

ஈழ நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக மலையாளத்திலுள்ள முட்டத்திற்கு வெங்கல ராசனும், அவனது இரு பெண்களும் வந்து சேர்ந்தனர். முட்டத்தில் புதிதாகக் கட்டிய கோட்டையினுள் வாழும் குடிமக்களுடன், அவர்களும் வாழ்ந்து வந்தனர். வெங்கல ராசனின் இரு பெண்களும் மிகவும் அழகானவர்கள். வந்திருப்பதோ புதிய இடம். ஆகையால் வெங்கல ராசன் அவர்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல அனுமதிப்பதில்லை. பறக்கை என்பது முட்டத்திற்கு அருகிலுள்ள ஓர் ஊராகும். அங்கு தேர்த் திருவிழா நடைபெற்றது. வெங்கல ராசனின் பெண்களும் தேர்பார்க்க ஆசைப்பட்டுத் தகப்பனிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் அவன் அனுமதி கொடுக்க மறுத்து

130