பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துணைப்படை அனுப்புவதாக வாக்களித்துவிட்டு நல்ல சமயத்தில் அவனைத் தனியே தவிக்கவிட்டனர். இரவிக் குட்டிப்பிள்ளை வீரமரணம் எய்தினான். அவனது இணையற்ற வீரத்தைப் போற்றும் தமிழ்நாட்டுப் பாடலும், மலையாள நாட்டுப் பாடலும் உள்ளன. இச்சம்பவங்கள் 1537லும், 1639லும் நடைபெற்றவை.

தேசிங்குராஜன் கதை

நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அப்பேரரசை எதிர்த்து செஞ்சிக் கோட்டையின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவனுக்கு உதவி செய்தவன் செஞ்சி முஸ்லீம்களின் தலைவன் முகமதுகான். ஜாதியையும் மதத்தையும், மேலாகக் கருதாமல் நட்பையும், நாட்டுப் பற்றையுமே மேலெனக் கருதியவன் முகமதுகான். இவர்களது வரலாற்றுக் கால வாழ்வு பத்து மாதங்கள் தான். நீண்டநாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. ஏன்? லட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை முன்னூறு குதிரைவீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு. முகலாயப் படைத்தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்று விட்டான். தானும் உயிர்நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லீம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலைவணங்குகிறது.

ஆங்கிலேயர் காலத்தில்
வரலாற்றுப்பாடல்கள்

இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கம் மறைமுகமாகவும், அதன் பின்னர் நேரிடையாகவும் வளரத் தொடங்குகிறது. இவ்வளர்ச்சி எதிர்ப்பின்றி நடைபெற்றுவிடவில்லை.

135