பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளையர்கள் கேட்டார்கள். மருது உடன்படவில்லை. இதனையே சாக்காக வைத்துக்கொண்டு, தங்களை எதிர்த்து நிற்கும் கடைசிப் பாளையக்காரனான மருதுவை ஒழித்துவிட வெள்ளையர்கள் முடிவு செய்தார்கள். கர்னல் வெல்ஷ் என்ற தளபதி பெரும் படையோடு சிவகங்கையைத் தாக்கினான். பல போர்களுக்கு அப்புறமும் மருதுவை வெல்ல முடியவில்லை. மருது முத்து வடுகன் நேர் பரம்பரையைச் சேர்ந்தவனல்லன் என்றும், பரம்பரைப் பாளையக்காரர்களின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவனல்லன் என்றும் கூறி முத்து வடுகனின் தாயாதி உறவினன் ஒருவனை பாளையக்காரனாக்கி தேவர் சாதியினரை மருதுவின் பக்கமிருந்து பிரித்தனர். இச் சூழ்ச்சிக்கு இரையான தேவர்கள் வெள்ளையருக்கு ஆதரவாகத் திரண்டனர். இவ்வாறு மருதுவின் அணியைப் பிளவு செய்து மருதுவைப் பலவீனப்படுத்தினர். கடைசியில் மருது பிடிபட்டான். சின்ன மருதுவும் ஊமையனும் பிடிபட்டனர். மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு ஓய்ந்தது.

வரலாற்றுப்பாடல்களைப் பற்றிய கருத்து

இவ்வரலாறு அனைத்தும் ஆங்கிலேயர் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் இவ்வீரர்கள் பிடிவாதமும் மூர்க்க குணமும் உடைய கலகக்காரர்களாகவே அவர்களால் வருணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது மானிடப் பண்புகளும் வீரத்தன்மையும் அவர்கள் மக்கள் பால் பெற்றிருந்த நன்மதிப்பையும் அவர்கள் மறைத்துவிட்டார்கள்.

ஆனால் மக்களுடைய படைப்புகளான நாட்டுக் கதைப் பாடல்கள் இவ்வீரர்களின் சிறப்பான பண்புகளைப் போற்றிப் பாடுகின்றன. அவர்களது வீரச் செயல்களைப் பற்றிக் கூறி நாம் பெருமை கொள்ளச் செய்கின்றன. மருதுவைப் பற்றிய பாடல்களில் இரண்டு ‘ஒரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ்’ தொடரில் சென்னை அரசினரால் வெளியிடப்பட்டுள்ளன. கட்டபொம்மன் கதைப் பாடலை என்னுடைய ஆராய்ச்சியோடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளார்கள்: இன்னும் பல

140