பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெளிவாக்கும். ஆனால் இக்கதைப் பாடல்களைக் குறித்த ஆராய்ச்சி எதுவும் இதுவரை தமிழ் நாட்டில் தொடங்கவில்லை. இவற்றை ஆராயாமல் தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை ஆராய முடியாது. இக் கதைப்பாடல்கள் ஆயிரக் கணக்கில் கிடைக்கின்றன. இவற்றின் ஆராய்ச்சியின் மூலம் நமது நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை சுமார் கி.பி.1330 முதல் கி.பி.1801 வரை ஆராய முடியும். இம் முயற்சிகளை தமிழறிஞர்கள் மேற் கொள்ள வேண்டும். இப்பணி பொதுப் பணியாகையால், ஆராய்ச்சிக் கழகங்களும், தமிழ்நாடு அரசினரும் இதற்கு உதவ வேண்டும்.

இந்நாட்டுப் பாடல்களின் மூலம் நாம் அறிந்துகொள்வன வருமாறு:-

1. நாட்டுப்புற மக்கள், வரலாற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? வரலாற்று வீரர்களைப் பற்றி அவர்களுடைய சிந்தனை என்ன?

2. சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர்கள் உயர்வாகக் கருதுவது எதனை? இழிவாகக் கருதுவது எதனை?

3. அவர்களுடைய நம்பிக்கைகள், துன்பங்கள் இன்பங்கள் இவை யாவை?

4. புராணங்களில் அவர்களுக்கு விருப்பமானவை எவை? அவற்றில் எத்தகைய மாறுதல்கள் அவர்கள் கருத்துக்களுக்கு உகந்தது?

5. அவர்கள் உருவாக்கியுள்ள பண்பாட்டையும், அதைச் சீரழிக்கும் முயற்சிக்கு அவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பையும், இக்கதைகளில் நாம் காண்கிறோம்.

நம் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை நாம் மதிப்பிட, நமது இலக்கியம், கலைகள் நாம் வளர்த்துள்ள பழக்க வழக்கங்கள் இவற்றோடு நாட்டுக் கதைப் பாடல்களையும் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும்.

144