பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


குறிக்கின்றன. அவற்றுள் நான்கு சிற்றூர்கள் 500 முதல் 2000 ஏக்கர் பரப்புள்ளவை மூன்று சிற்றூர்கள் 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை. ஆறு 100 முதல் 200 வரை; மற்றும் ஆறு 25 முதல் 50 வரை இரண்டு சிற்றூர்கள் 25 ஏக்கருக்கும் குறைவு (சோழர் வரலாறு, மு.இராச மாணிக்கனார்). கல்வெட்டுக்களில், கிராமங்களின் பயிருள்ள நஞ்செய் நிலம் முழுவதையும் கோயில் காணியாக்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுள் புஞ்செயை உழவர்களுக்கு வெள்ளான் வகை (சொந்த நிலம்}யாக விடுத்து, அது நஞ்செயாகத் திருத்தினால் கோயில் காணியாக எடுத்துக் கொண்ட விவரங்களையும் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. உதாரணமாகக் கீழ் வரும் கல்வெட்டைப் பார்க்கலாம்.

‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமான் ராஜாதிராஜ ஸ்ரீ வீர நாராயண சோழ தேவர்க்கு செல்லா நின்றயாண்டு ஒன்பதாவது பரஞ்சரா வள்ளியில் மகாதேவர் நட்டுரமர்ந்தார்க்கும், (கோவில் மூர்த்தியின் பெயர்) பல நிமந்தப் படிக்கும், தீபாராதனைப் படிக்கும் ஊரார் பிடாரியூர்க்குப் போகும் வழிக்குக் கீழ்பாகம் கொடுத்தோம். இதுக்கு நிலம் அரைக் கிடவுக்காக, பரஞ்சரா வள்ளியில் நிலத்தில் புஞ்செய் நீக்கி, நஞ்செய் கொடுத்தோம். இந்த நிலம் தேவதானமாக உழுது மேல் வாரம் மேற்கொண்டு படித்தரம் தீபாராதனை நடந்து வருகிறதற்காக’

இவை போன்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழ்நாட்டில் கோயிலுள்ள ஊர்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டுக்களின் மூலம், சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்பது புலனாகிறது. எவ்வாறு மாற்றினார்கள் என்பதறிய அவர்கள் காலத்தில் எத்தகைய நிலவுடைமை முறை நிலவியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமை அக்காலத்தில் நான்கு வகையாகவிருந்தது. (1) வெள்ளான் வகை: இது சொந்த நிலம், இந்நிலங்களில் ஒரு பகுதி ‘உழுவித்துண்பார்’ என்ற உழவர்களிடமிருந்தன. (2) தேவதானம்: இந்நிலங்கள் கோயில்களுக்கு உடமையாக இருந்தன. அவற்றின் மேற்பார்வை சபையாரிடமிருந்தன. அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களே. சிறுபான்மை
22