பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலையை அறியலாம். அதிகாரிகளின் பட்டங்கள் இவர்கள் பெயரோடு சேர்த்து வழங்கப்படும். உதாரணமாக, நக்கன் ஸ்ரீதேவி. சோழ மாணிக்கம், மாசாத்து பூவேந்திய சோழ மாணிக்கம் என்ற பெயர்கள் பட்டம் சேர்ந்து வழங்குபவை. இவர்கள் கொணர்ந்த செல்வங்களால் கோயில்களுக்கு நிலங்கள் வாங்கி அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில உரிமைகள் இத்தேவரடியார்க்கு உண்டு. தேவரடியாரில் மற்றோர் வகையினர் ஏழைப் பெண்கள். பஞ்சக்காலத்தில் நிலமிழந்தவர்களும், வெள்ளக் காலத்தில் நிலமிழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோயில்களுக்கு விற்று விடுவார்கள். அப்பெண்களுக்கென்று கொடுக்கப்படும் விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். அப்பெண்களின் தந்தையோ, தமையனோ, அல்லது உறவினனோ அதனைக் காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும்போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக் குறைக்கச் சபையாரும், அரசனும் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவார்கள். அச்சமயங்கள் உழவர்களாயிருக்கும் தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள். இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக் கொள்ளும்படி நாடாள்வனான சோழ மன்னனது அதிகாரி கட்டளை அனுப்பினான். சபையார் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். அவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியாரான திருவீதிப் பணி செய்வாரும் திரண்டனர். தங்கள் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட ஒரு தேவரடியாள்முன் வந்தாள். அவள் பெயர் சதுரி மாணிக்கம். அவள் தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்டக் கோபுரத்தின் மேலேறி விழுந்து உயிர் விட்டாள். நாட்டார் கட்டளையை எதிர்த்தனர் சபையார் கட்டளையை மாற்ற அரசனிடம் விண்ணப்பித்தனர். கட்டளையை மாற்ற அரசன் திருமுகம் (ஓலை) அனுப்பினான்.

அநியாயமான வரிகளை எதிர்க்க மக்கள் வரி கொடா இயக்கம் நடத்தியதும் உண்டு. அப்போர் முறை மேற்கூறிய தனிப்பட்ட

25