பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்றைய இந்தியப் பண்பாட்டில் திராவிட அம்சங்களை நாம் சுட்டிக்காட்டலாம். லிங்க வணக்கம், சக்தி வணக்கம், நாகர், யக்ஷி வணக்கம் இன்னும் இயற்கைத் தேவதை வணக்கம் முதலிய திராவிடப் பண்பாட்டிலிருந்து தோன்றியவை பல கலைகளிலும் அவர்களது காணிக்கையைக் காணலாம். ஆரியர்கள் வட நாட்டார், திராவிடர் தென்னாட்டார்; ஆரியர் திராவிடரை வெற்றி கொண்டனர். இவ்வெற்றி முடியரசு அமைப்பு இன ஆட்சி முறையின்மீது கொண்ட வெற்றி என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். ஆனால் வெற்றி பெற்றவர்களது பண்பாடு, தோற்றவரது கலைகளாலும் பண்பாட்டாலும் மூழ்கடிக்கப்பட்டு, தோற்றுவிட்டது. திராவிடர் பண்பாட்டின் முக்கிய அம்சங்களான லிங்க வணக்கம், சக்தி வணக்கம், பக்தி இயக்கம், அது தோற்றுவித்த உருவ வழிபாடு முதலியன ஆரியர் பண்பாட்டை ஆட்கொண்டது. ஆரியரது யக்ஞம் என்ற வழிபாட்டு முறையை திராவிடரது பூசை என்ற வழிபாட்டு முறை ஆக்கிரமித்து மாற்றிவிட்டது.

சிற்பக் கலையில் மூங்கில் வேலைப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய கலை உருவங்கள், திராவிடர் கலையில் தோன்றி, இந்தியக் கலைக்குப் பரவியிருக்க வேண்டும். புத்த சைத்தியங்கள், (பிரார்த்தனை மண்டபங்கள்) புராதன திராவிடக் கல்லறைகளின் சிற்ப அமைப்பிலிருந்து தோன்றியவை. ஆரியர்கள் கடற்கரையில் வாழ்ந்தவர்களல்லர். ஆகவே கப்பல் நிர்மாண அறிவிலும், மீன் பிடித்தல், தொழில், புராதன கடல் வழி வாணிபம் அனைத்தும் திராவிடர்களுடையதே.

தட்சிணத்திலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த திராவிடருடைய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கிறிஸ்து சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வளர்ச்சி பெற்றதோர் பண்பாட்டை உடையவர்கள் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரை முதல் கிழக்குக் கடற்கரை வரை பரந்து கிடந்த ஆந்திரப் பேரரசு புகழ் பெற்று விளங்கியது. அக்காலத்திலேயே கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர் பேரரசு வலிமை பெற்று விளங்கியது. முதல் மூன்று

29