பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவை என்பதை நினைவில் கொண்டும் இரும்பு தென்னிந்தியாவிலேயே உருக்கி எடுக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருவது தவறாகாது. வேதங்களில் இரும்பு என்ற சொல் இல்லாததைக் கவனத்தில் கொண்டு கி.மு.1500ம் ஆண்டிற்கு முன் இரும்பு வட இந்தியாவில் உபயோகத்தில் இருந்ததில்லை எனக் கூறுவாரும் உளர். ஆயினும் இந்தியா முழுவதிலும் சுமார் 3000 ஆண்டுகளாகவே இரும்புக் கால நாகரிகம் தோன்றிவிட்டது என்று கூறலாம்.

திராவிடருக்கும் முந்திய பண்பாடு ‘நிகிரிடோ’ பண்பாடு என்றும், அதுவும் இந்தியா முழுவதிலும் காணப்பட்டதென்றும் நினைக்கப் பல சான்றுகள் உள்ளன.

இந்தியாவினுள் ஆரியர் நுழைந்த காலம் சுமார் கி.மு.2000 முதல் 1600 வரை இருக்கலாம். சிந்து சமவெளியில் குடியேறி பின்னர் அவர்கள் கங்கைச் சமவெளியிலும், விந்திய மலையடிவாரத்திலும் பரவினார்கள் என்று நாம் கருதலாம். பின்னர் அவர்கள் தென்னிந்தியாவிலும் குடியேறினர். வேதகால ஆரியர் தச்சுத் தொழில், வீடுகட்டும் தொழில், ரத நிர்மாணம், உலோக வேலைகள், செம்புப் பாத்திரங்கள் செய்தல், தங்க நகைத் தொழில் முதலியனவற்றை அறிந்திருந்தார்கள். நெசவும். மண்பாண்டத் தொழிலும், தோல் பதனிடும் தொழிலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தெய்வப் படிமங்களை அவர்கள் கல்லாலோ, உலோகத்தாலோ செய்தார்கள் என்பதற்குப் புராதன நூல்களில் சான்று கிடைக்கவில்லை. ஆரியர்களது கலை அழகுபடுத்தும் கலையாக அடையாளபூர்வமான கலையாக இருந்தது. இயற்கையையோ, மனிதர்களையோ, உருவபூர்வமாக அல்லாமல், அடையாளபூர்வமாக இக்கலை வெளியிட்டது. ஆனால் திராவிடக் கலையில் உருவபூர்வமான வெளியீடு காணப்பட்டது. ஆனால் வளர்ச்சியுற்ற நிலையில் அடையாள பூர்வமான கலைப்போக்கும், உருவபூர்வமான கலைப் போக்கும் கலந்து (Synthesis) புதியதோர் கலைப் போக்கு உருவாயிற்று. உதாரணமாக பெளத்தக் கலையில் உருவமும், அடையாளமும் ஒன்றி நிற்பதைக் காணலாம். யானையின் உருவமும், அதன் பொருளான செழிப்பும் பழங்கால நாணயங்களின் சின்னங்களாகக் காணப்படுகின்றன. யானையின்


31