பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




தமிழக வரலாற்றுக்
கண்ணோட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக வரலாற்றுச் சான்றுகள் பல வெளியாகியுள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன.

வரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள் கொடுக்கிறார்கள். அதனாலேயே ஒரேவிதமான நிகழ்ச்சிகள் கண்ணோட்ட வேறுபாட்டால் இருவிதமான பொருள் பெறுவதுண்டு.

தமிழக வரலாற்றுத் துறையில் இருவகையான கண்ணோட்டங்களை நாம் காண்கிறோம். ஒவ்வொரு கண்ணோட்டமும் குறிப்பிட்ட அரசியல்-சமூக சூழ்நிலையில் எழுகின்றது. பின்னர் அக்கண்ணோட்டம் வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட முறையில் பொருள் அளிக்கின்றது. இவ்வாறு வரலாற்றின் பொருள், கண்ணோட்டத்தைப் பொறுத்ததாகி விடுகிறது.

நமது வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்குறித்த இரு கண்ணோட்டங்கள் எவ்வகையில் வழி காட்டுகின்றன? எச்சூழ்நிலையில் அவை எழுந்தன? அவற்றின் மூலம் வரலாற்றுண்மையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? என்னும் வினாக்களுக்கு விடை காண முயலுவோம்.

இந்திய வரலாறு முதன்முதலில் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அவர்களில் வின்சென்ட் ஸ்மித் முக்கியமானவர். அவர் சரித்திரம் எழுத மேனாட்டு ஆசிரியர்களது கீழ்திசைத் தத்துவ ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டார்.


33