பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவுவதற்கு முன் இந்தியாவில் தோன்றியிருந்த நாகரிகத்தைப் பற்றி உயர்வான எண்ணம் அவருக்குக் கிடையாது. ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவியது இந்நாட்டின் தவப்பயன் என்று எண்ணினார். ஆங்கில ஆட்சியின் மேன்மையை விளம்பரப்படுத்த விரும்பினார். இக்கண்ணோட்டம் வரலாற்றுண்மைகளை அவருடைய போக்கில் காண உதவிற்று. இவரைப் போன்றே பல ஆங்கில ஆசிரியர்கள் இந்நாட்டு உண்மைகளைக் கண்டார்கள். இது ஏகாதிபத்தியக் கண்ணோட்டமாகும். இவர்கள் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை விரும்பவில்லை. எனவே ஒவ்வொரு இன மக்களின் நாகரிகத்தையும் தனிப்பட்டதாகவும், ஒன்றிற்கொன்று முரண்பட்டதாகவும் வருணித்தார்கள். ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் இவற்றிடையே தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருப்பது ஆகிய தன்மைகளை இவர்கள் கண்ணோட்டக் கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டார்கள். இந்து முஸ்லீம் முரண்பாடுகளைப் பெரிதாக்கி வரலாற்றில் அதனையே நமது இடைக்கால வரலாற்றின் அச்சாணியாக்கிக் காட்டினார்கள். ஆங்கில ஆசிரியர்களில் சிலர் ஆரிய நாகரிகத்தை உயர்த்தினர். சிலர் இந்து மன்னர் ஆட்சியை உயர்த்திப் பேசினர். இன முரண்பாடுகளையும் மிக விரிவாக எழுதினர்.

இந்நூல்கள்தாம் நமது தமிழக வரலாற்று ஆசிரியர்களின் மூல நூல்கள். அவற்றை அவர்கள் பயன்படுத்திய விதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.

தமிழக வரலாற்றை எழுதியவர்களில் இரு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள் உண்டு என்று முன்னர் குறிப்பிட்டேன். முதல் கண்ணோட்டம் எது என்று தற்போது காண்போம்.

தமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதியவர்கள் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கர், நீலகண்ட சாஸ்திரியார், பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் முதலியோர். இவர்கள் யாவரும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் ‘அறிவாளி’ வர்க்கம் என்று கருதப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவ்வர்க்கம் ஆங்கில ஆட்சியில்,


34