உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்று நிகழ்ச்சிகளை திராவிட உயர்வு என்ற கண்ணோட்டத்தில் இவர்கள் கண்டனர். வேத கால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று முதல் கண்ணோட்டமுடையவர்கள் கூறினால் இவர்கள் கற்கால முதல், தமிழ் நாடும், திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்று கூறினர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தேட, தென்னாட்டு வரலாறே, திராவிட ஆரிய முரண்பாடுதான் என்று கூறினர். இராமாயணக் கதையை ஆரிய திராவிடப் போராகச் சித்தரித்தனர். சுக்ரீவனையும், அனுமானையும் ஆரிய அடிவருடிகளாக்கினர். வாலியை ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்க திராவிட வீரனாக்கினர். ஆரியர் ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட நாடு என்றும் போராடியுள்ளது; இது விடுதலை காக்கும் உணர்வு என்று அந்த மூச்சில் வடநாட்டை அடக்கியாண்டான் கரிகாலன் என்றும், கனக விசயர் தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தான் செங்குட்டுவன் என்றும் ஆதிக்கப் பெருமை பேசுவர். ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர்.

இவ்விரண்டு போக்குடையோர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் தனித் தனியே விரித்து வைத்த இரண்டு வலைகளில் விழுந்து அதனையே வரலாற்று ஆதாரமாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டு வரலாற்றை இவ்விரு கண்ணோட்டமுடையோராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இவையிரண்டுமே விஞ்ஞானக் கண்ணோட்டங்களல்ல.

தமிழ்நாட்டு வரலாற்றை உண்மையாக்கிப் புரிந்து கொள்வதற்குத் தமிழ் நாட்டு வளர்ச்சியையும், பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்புகளையும் ஆராய வேண்டும்.

தமிழர் சமுதாய வளர்ச்சியை வரலாற்றுத் தொடக்ககால முதல் ஆராய்வதற்கு, சிற்சில பிராமிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் ஆதாரமாக அமையக் கூடும். புத்த மத வரலாற்று நூல்களும், சைவ வைணவ சமய நூல்களும் ஒரளவு உதவி புரியக்


37