பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மூடுதிரை
 

(‘நாடும் நாயன்மாரும்’ என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க. கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ் நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித் தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில் ஆராய்கிறார். இத்தகைய முயற்சி நம் நாட்டுத் தத்துவங்களை, சமூக அடித்தளத்தோடு சேர்த்துக் கற்றுக் கொள்வதற்கோர் வழிகாட்டியாக உள்ளது. இம்முயற்சி மிகவும் போற்றத்தக்கது. ஆயினும் அவருடைய வரையறுப்புகளிலிருந்து நான் பல விஷயங்களில் மாறுபடுகிறேன். கண்ணோட்டம் ஒன்றாயினும் அது ஆதாரங்களை வரிசைப்படுத்தும் போது வேறுபடக் கூடும். அது கண்ணோட்டத்திலுள்ள குறைபாடாகவோ ஆதாரங்கள் போதிய அளவு சேகரிக்கப்படாததாலோ இருக்கலாம் இது அவருடைய கட்டுரைக்கு மட்டுமல்ல, என்னுடைய இச்சிறு கட்டுரைக்கும் பொருந்தும். இது போன்ற பல கட்டுரைகள் வெளியாகுமாயின், நமது கருத்துக்களைத் தொகுத்து விவாதித்து நமது பொதுவான கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டு ஆதாரங்களை ஆராய்வதில் கருத்து ஒற்றுமை ஏற்படும் என்ற உறுதியான நம்பிக்கையோடு இதனை எழுதுகிறேன்-நா.வா.)

நாயன்மாரது பக்தி வெள்ளமான இலக்கியத்தின் அடித்தளத்தைக் காண ‘நாடும்-நாயன்மாரும்’ என்ற கட்டுரை முயலுகிறது. இம்முயற்சி மிகவும் கடினமானது. கடினமான இப்பணியை மேற்கொண்ட கைலாசபதி அவர்களின் துணிவை நாம் போற்ற வேண்டும். அம்முயற்சி இத்துறையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தினால் அதுவே மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும். இப்பயனை இக்கட்டுரைத் தோற்றுவிக்கும் என்பதே என் நம்பிக்கை.

இக்கட்டுரையில் சைவம் தனக்கு முன் தமிழ் நாட்டில் வேரூன்றி நின்ற இரண்டு சமயங்களை எதிர்த்துப் போராடி வளர்ந்தது என்று ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அதனைப் பற்றி அவர் தரும்


40