உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தையாக தாயாக வருணித்துப் பாடினார்கள். அறிவைப் பின் தள்ளி உணர்ச்சியை ஆழமாக்கி பக்தி வெள்ளத்தில் நாட்டை மூழ்கடித்தார்கள்.

இந்நிலையில் வாணிக வர்க்கம் பலம் குன்றியிருந்தது. மூவரசுகளிடையே வாணிகத் தடைகள் தோன்றியிருந்தன. மேனாட்டு வாணிபம் சீர்குலைந்தது. இஸ்லாமிய வளர்ச்சியாலும், வெற்றியாலும் அண்டை நாடுகளில் இவர்களது வாணிபம் நின்றது. நாட்டுக்குள் முடங்கிய வணிக வர்க்கம் வலிமை குன்றி இத்தாக்குதலைச் சமாளிக்க இயலாது நின்றது.

இந்நிலையில் சைவம் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் பல்லவர் நாட்டிலும் பரவிற்று. சமூக ஒற்றுமைக்கு அது துணை செய்தது. சமண பெளத்த மடங்கள் செல்வாக்கிழந்தன. அரசர்கள் செல்வாக்குப் பெற்ற சைவத்தை ஆதரிக்கத் தொடங்கினர். சமண பெளத்த மடாலயங்களின் சொத்துக்கள் புதிதாகத் தோன்றிய சிவாலயங்களுக்கு மாறின. புதிய தேவ தானங்களும், பிரம தேசங்களும் சிருஷ்டிக்கப் பட்டன. பாண்டி நாட்டின் வேள்விக்குடி செப்பேடுகளும் திருநெல்வேலி செப்பேடுகளும் களப்பிரர் காலத்தில் அந்தணர்களிடமிருந்து பறித்துக் கொண்ட நிலங்களை மீண்டும் அவர்களுக்கு உரிமையாக்கியதைக் கூறுகின்றன. மகேந்திரன், மாமல்லன் காலத்துச் சாசனங்கள், காஞ்சி கைலாயநாதர் கோவிலுக்கு, பண்டைச் சமணப் பள்ளிகள் விகாரைகளின் நிலங்களை உரிமையாக்கியதைக் கூறுகின்றன. இவ்வாறு சிவன் கோயில்கள் படிப்படியாக நிலவுடைமை ஸ்தானங்களாயின. இம்முறை நாடு முழுதும் பரவிற்று. ஊர் நிலத்தின் பெரும் பகுதி கோயில்களுக்குச் சொந்தமாயிற்று. அதற்கடுத்தாற்போல நிலமுடைய பெரு நிலக் கிழார்கள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும். ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும் நாட்டினராகவும், அதிகாரம் பெற்றனர்.[1] இப்படி ஒர் புதிய நிலவுடைமை முறை உருவாகியது. வாணிக வர்க்கத்தினரும் தமிழ்நாடு முழுவதும் வாணிபம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெற

46

  1. South Indian Polity - K.S.Krishnaswamy Iyengar உத்திரமேரூர் சாசனம்.