பிறமொழிகளிலும் சிறந்தது. பிற மொழிகளை இகழ்ந்து நமது மொழியைப் போற்றுவோம் என்ற தனிமையுணர்வையும், பிரிவினையுணர்வே தமிழுணர்ச்சிக்கும், நாட்டுப் பற்றுக்கும் அவசியம் என்பது சுந்தரம் பிள்ளையின் கருத்து. மேலும், எல்லாப் பகுதி மக்களும், ஒன்றுபடும் முயற்சி துவங்கிய காலத்தில் இக்கருத்து தமிழரைத் தனிமைப்படுத்த உதவும் கருத்து.
‘வடமொழி உயர்ந்தது, அதனிடம் கடன் வாங்கியே தமிழ் பிழைக்கிறது.’ என்று பேசிய பிராமணர்களின் கருத்துக்கு இது எதிர்த்தாக்குதல் என்று கட்டுரையாசிரியர் கூறுகிறார். அது வடமொழி வெறியென்றால் சுந்தரம் பிள்ளையின் கருத்து தமிழ் வெறியாகாதா? ஒரு வெறியை மற்றொரு வெறியால் அடக்க முடியுமா? சிவன் உயர்ந்தவன், திருமால் உயர்ந்தவன் என்ற சண்டை தமிழ்நாட்டில் யாருக்காவது வெற்றியில் முடிந்ததா? சமரசவாதியான கம்பன்,
‘அரனதிகன், உலகளந்த அரியதிகன்
என்றுரைக்கும் அறிவிலார்.’
என்று தீர்ப்பு வழங்கினான்.
இக்காரணம் கூறி தமிழ் வெறியை நியாயம் என்று கூற முடியாது. இக்கருத்துக்களின் வளர்ச்சியை மறைமலையடிகளின் எழுத்துக்களில் காண்கிறோம்.
அவரைப் பற்றி தனிநாயக அடிகள் கூறுவதாவது:- ‘மறைமலையடிகள் இந்திய விடுதலையின் மீது மோகம் கொண்டவரல்ல. மேல் சாதியினர் கீழ் சாதியினரை அடக்கி ஒடுக்குவதை அனுமதிக்கும் சுதேச அரசாங்கத்தைப் பார்க்கிலும், பிரிட்டிஷ் அரசாங்கம் நீதியாகவும், நேர்மையாகவும் ஆட்சி நடத்தும் என்று அவர் கருதினார். ஓய்வு பெற்று தனித்து வாழ்ந்த அறிவாளியாதலால், அவர் அரசியல் இயக்கங்களின் சுழலில் சிக்காமல் வாழ்ந்தார்.’
இந்திய விடுதலை தேவையில்லை; வெள்ளைக்காரன் நியாயமானவன்; பிராமணன் மோசமானவன். நம் நாட்டவன் ஆட்சி வேண்டாம் என்று கருதிய மறைமலை அடிகளுக்குத் தமிழர் வாழ்வு
56