பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பற்றி ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. அது வடமொழியிலிருந்து தமிழைப் பாதுகாப்பது, பிராமணரிடமிருந்து தமிழைப் பாதுகாப்பது ஆங்கில மொழியாதிக்கத்தால் தமிழ் அழிவதைக் காணாத கண்கள் வடமொழிப் பூதத்தைக் கண்டன. பூதம் என்பது மனப்பிராந்திதானே? இல்லாத பூதத்தைக் கொல்ல அவர் வாளைச் சுழற்றினார். இதுதான் அவரது தமிழுணர்வு, இந்திய விடுதலை தேவையில்லை என்று எண்ணியவருக்கு இந்திய ஒருமையைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்? தமிழ் வெறிக்கும், இந்திய விடுதலையார்வத்திற்கும் ஒட்டும் உறவும் ஏது? எனவே முரண்பாடில்லாத தமிழுணர்வு என்று தனிநாயக அடிகள் அழைப்பது பிற மொழிகளைப் பழிப்பது பிறமொழி பேசுவோரைப் பழித்து, தமிழின் உயர்வை நிலைநாட்டுவது தான் என்று தோன்றுகிறது.

இனி தனிநாயக அடிகள் திராவிட இயக்கத்தினரின் தமிழுணர்வைப் போற்றிக் கூறுகிறார். அவருடைய கருத்தை அவர்களது சொற்களாலேயே கூறுவோம்.

‘தமிழ் நாட்டிற்கும், திராவிடஸ்தான் கருத்திற்கும் விசுவாசமுடைய முரண்பாட்டை நாம் ஒரு குறிப்பிட்ட கவிஞர் வரிசையில் காண்கிறோம். இந்திய நாட்டின் மீது விசுவாசம் இருத்தல் வேண்டுமென அவர்கள் சொல்லுவதில்லை. ஐக்கிய உலகத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இது பழந்தமிழரது கருத்துத்தான். இந்த வரிசையில் இருப்பவர் பாரதிதாசன். கண்ணதாசனும், முடியரசனும் அவரது வழித் தோன்றல்கள்.’

இதுமட்டுமல்ல; திராவிடஸ்தானுக்குப் பாரதிதாசன் எல்லைகூறி அதற்கப்பால் ஒரு காலத்தில் கடல்தான் இருந்தது என்று கூறுகிறார். பிற்காலத்தில் தோன்றிய ஆரிய நாட்டிற்கு எதிராக, அதனைச் சிறுமைப்படுத்தத் திராவிடத்தின் தொன்மையை நிலைநாட்ட பாரதிதாசன், முயலுகிறார்:

‘அடேடே, வடபெருங்குன்றமே இல்லை,
அவ்விடம் நீர்ப்பரப்பு-ஆழ்கடல் உள்ளதே,
அப்பெருங்கட அலை, அழகிய விந்தியல்

57