பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமூக வாழ்க்கையையும், பண்பாட்டையும், இலக்கிய வளத்தையும் கலைச்செல்வத்தையும், உருவாக்கியவர்கள் குறிப்பிட்ட நூற்றுக் கணக்கான புகழ் பெற்ற மனிதர்கள்தானா என்ற கேள்விகள் தமிழர் வரலாறு பற்றி எழுந்துள்ள சில நூல்களைப் படிக்கும்போது நமக்குத் தோன்றுகின்றன.

தமிழ் நாட்டின் வரலாறு பற்றி இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பல நூல்கள் சென்ற ஐம்பது ஆண்டுகளில் வெளியாகியுள்ளன என்பதை நான் மறக்கவில்லை. சங்க காலத்தைப் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப் பிள்ளையின் நூலும், சமணர்களது ஆதிக்கத்தைப் பற்றி சக்கரவர்த்தி நயினார் அவர்கள் எழுதிய நூல்களும், சோழ வம்சத்தைப் பற்றி கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூல்களும், பல்லவர் வரலாறு பற்றி பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும், இன்னும் பலவும் தமிழாராய்ச்சியாளர்களுக்குப் பழக்கமானவையே. ஆயினும் இவையாவும் முழுமையான தமிழர் வரலாறு ஆகா. குறிப்பிட்ட சரித்திர காலங்களின் நிகழ்ச்சிகளை இவை விவரிக்கின்றன என்பது உண்மையே. ஆனால் தமிழர் சமூகம் மாறி வந்துள்ளது எவ்வாறு என்பதையும், அம்மாறுதல்களுக்கு அடிப்படையான காரணங்கள் யாவை என்பதையும், இந்நூல்கள் சுட்டிக் காட்டவில்லை.

ஆகவே முழுமையான தமிழர் வரலாறு ஒரு புதிய அடிப்படையில் எழுதப்பட வேண்டும்.

இதுவரை பொதுவாக எந்த அடிப்படையில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன? ‘பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மகா புருஷர்கள் தோன்றுகிறார்கள், அவர்களே நாட்டின் வரலாற்றை உருவாக்குபவர்கள்’ என்பர் ஒரு சாரார். இக்கொள்கையின்படி இரு மகா புருஷர்கள் தோன்றுவதற்கு இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் வாழும் மக்கள் வாயில்லாப் பூச்சிகள் சொல்வதைச் செய்து வாழும் இயந்திரங்கள் ஆட்டி வைக்கிறபடி ஆடுகிறவர்கள். ‘சமூக மாறுதல்கள், சரித்திர மாறுதல்கள் நிகழ்வது திடீர்ப் பிரளயம் போன்ற புரட்சிகளால்’

2