பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருஞ்சோற்றுதியன் என்னும் சேரமன்னன் விருந்தளித்தான், என்று புறநானூற்றுச் செய்யுள் ஒன்று கூறுகிறது. இது வரலாற்று உண்மையாக இருக்க முடியாது. பாரதக் கதையோடு தமது மன்னனைத் தொடர்பு படுத்துவதாகப் புனைந்து கூறப்பட்ட செய்தியே அது. அது போலவே மோரியரைப் பற்றிய பழஞ் செய்யுள்களிலும், புலவர்கள் தங்களது மன்னர்களைப் பெருமைப்படுத்துவதற்காக, முற்காலத்தில் வாழ்ந்த மோரியர்களோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். உண்மையில் புறநானூறு செய்யுள்களில் பழமையானவை எழுதப்பட்ட காலம், கி.பி.முதல் நூற்றாண்டே. எனவே மோரியரைப் பற்றிய குறிப்புகளெல்லாம் பழைய சங்கச் செய்யுள்கள் எழுதப்பட்ட காலத்துக்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை. இதுவே பிள்ளையவர்களது கருத்தாகும். டி.டி. கோஸாம்பி அவர்கள் 'புராதன இந்திய சரித்திர அறிமுகம் என்ற நூலில் மோரியர் பற்றிய இலக்கியச் சான்றுகள் பற்றி தமது கருத்தை வெளியிட்டுள்ளார். மோரியர் காலத்தில் தமிழிலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ் நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும், இலக்கியமும் தோன்ற வில்லை. இக்கருத்தைத் தாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்று அவர் கூறுகிறார். பாரதீய வித்தியா பவனம் வெளியிட்டிருக்கும், 'புராதன இந்திய சரித்திரம்' என்னும் நூலில் வம்ப மோரியர் என்ற சொற்றொடருக்கு upstart mauryas என்ற பொருள் கொடுத்து மோரியர் காலத்திலேயே தமிழ் நாட்டுப் புலவர்கள். மெளரிய சாம்ராஜ்யத்தைப் பற்றியும், மெளரியர்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள் என்று கூறுகிறார். இதன் மூலம் மெளரியப் பரம்பரை ஆட்சிக் காலத்தில், மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டில் வளர்ச்சியுற்றிருந்ததை இவ்வரலாற்று ஆசிரியர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் மோரியர்களைப் பற்றிய குறிப்புகளுள்ள, பாடல்களைக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாற்றைத் தெளிவாக அறிவதற்கு அந்நூலில் முயற்சி எதுவும் செய்யப்படவில்லை.

இக் கருத்துகளைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன். முதன் முதலில் பேராசிரியர் வையாபுரிப்

83